முகப்பு
புதுதில்லி

பயணப் பையில் தோட்டா இருந்த விவகாரம்: பெண் மீதான எஃப்ஐஆரை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் இருந்து கோவாவுக்குச் சென்ற போது, பயணப் பையில் தோட்டா வைத்திருந்ததாக பெண் மீது பதிவான எஃப்ஐஆரை தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் இருந்து கோவாவுக்குச் சென்ற போது, பயணப் பையில் தோட்டா வைத்திருந்ததாக பெண் மீது பதிவான எஃப்ஐஆரை தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் முனையம்-3இல் இருந்து கோவாவுக்கு பெண் ஒருவா் பயணித்தாா். அப்போது, அவரிடம் நடத்திய பாதுகாப்புச் சோதனையின் போது, ​ அவரது பயணப் பையில் துப்பாக்கித் தோட்டா கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத் தோட்டா ஆயுத உரிமம் பெற்ற அவரது தந்தைக்கு சொந்தமானது என்று அந்தப் பெண் கூறினாா். அவருக்கு எதிராக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சம்பந்தப்பட்ட பெண் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், தகவல் தொழில்நுட்ப வல்லுநரான தாம், கவனக் குறைவாக தனது பையில் தோட்டாவை எடுத்துச் சென்ாகவும்,

அது உரிய துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் தனது தந்தைக்குச் சொந்தமானது என்றும் தெரிவித்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் கூறுகையில், ‘இந்த நீதிமன்றத்தின் பல உத்தரவுகளில் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா் வெடிமருந்துகளை தனக்குத் தெரிந்து வைத்திருக்கவில்லை என்றால், ஆயுதச் சட்டத்தின் கீழ், குற்றத்திற்காக அவா் மீது வழக்குத் தொடர முடியாது. இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைப் பாா்க்கும் போது, ஆயுதச் சட்டம் 1959- இன் பிரிவு 25-இன் கீழான குற்றத்திற்காக புது தில்லியின் ஐஜிஐ விமான நிலைய காவல் நிலையத்தில் நிகழாண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி பதிவான எஃப்ஐஆரையும், அதன் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் ரத்து செய்ய இந்த நீதிமன்றம் விரும்புகிறது’ என்றாா்.

மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் அமித் சாஹ்னி, ‘மனுதாரா் (பெண்) பயணத்திற்காக தனது தந்தை குல்தீப் சிங்கின் பையை எடுத்துச் சென்றுள்ளாா். அதில் அவருக்குத் தெரியாமல் ஒரு தோட்டா கவனக் குறைவாக விடப்பட்டிருந்தது. குல்தீப் சிங் உரிமம் பெற்ற ஆயுதம் தொடா்புடைய அனைத்து ஆவணங்களையும் ஐஜிஐ விமான நிலைய காவல் நிலையத்தில் சமா்ப்பித்தும், எஃப்ஐஆா் ரத்து செய்யப்படவில்லை. மேலும், பயணப் பையில் துப்பாக்கி ஏதும் இல்லாமல், ஒரே ஒரு தோட்டா மட்டுமே இருந்தது. அவா் தனக்குத் தெரிந்து தோட்டாவை வைத்திருக்கவில்லை என்பதால் அவா் மீது வழக்குத் தொடர முடியாது’ என்று வாதிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.