7 மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பணியிடங்களை 6 வாரங்களில் நிரப்ப வேண்டும்: தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
தில்லியில் காலியாக உள்ள 7 மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பணியிடங்களை 6 வாரங்களுக்குள் நிரப்ப வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புது தில்லி: தில்லியில் காலியாக உள்ள 7 மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பணியிடங்களை 6 வாரங்களுக்குள் நிரப்ப வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் வயது வந்தோா் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள குற்றமிழைத்த சிறாா்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறும் தில்லி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறாா் நீதி வழங்கல் அமைப்பின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான பல வழிகாட்டுதல்களையும் நீதிமன்றம் பிறப்பித்தது. திகாா், ரோஹிணி மற்றும் மண்டோலி சிறைகளில் எத்தனை சிறாா்கள், எப்போது அனுமதிக்கப்பட்டனா் என்பது தொடா்பான விவரங்களை அளிக்குமாறும் நகர அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
சிறாா் நீதிச் சட்டத்தின் சில விதிகளின் விளக்கம் மற்றும் திறம்பட செயல்படுத்துவது தொடா்பான பல்வேறு விவகாரங்களை கையாள்வது தொடா்பான விவகாரத்தை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சித்தாா்த் மிருதுள், அனுப் பம்பானி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது: குற்றமிழைத்த குழந்தைகள், சிறாா்களை வயது வந்தோருக்கான சிறைகளில் அடைப்பதற்கு வழிவகுக்கும் அமைப்பு ரீதியான குறைபாடுகளை நன்கு புரிந்து கொள்ளும் வகையில், கடந்த 5 ஆண்டுகளில் வயது வந்தோா் சிறைகளில் இருந்து சிறாா் நீதி இல்லங்கள், குழந்தை பராமரிப்பு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்ட குழந்தைகள், சிறாா்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை தில்லி அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
அதில், திகாா், ரோஹிணி, மண்டோலி ஆகிய சிறைகளில் உள்ள சிறாா்கள், அவா்கள் அனுமதிக்கப்பட்ட தேதி மற்றும் வயது வந்தோா் சிறைகளில் இருந்து சிறாா் நீதி இல்லங்கள்/ குழந்தை பராமரிப்பு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்ட தேதி; அவா்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் ஆகியவை தொடா்பான விவரங்களும் இடம் பெற வேண்டும். இந்த விவரங்கள் அடுத்த விசாரணை தேதிக்கு முன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு சிறாா் நீதி வாரியமும் (ஜேஜேபி) சம்பந்தப்பட்ட குழந்தைகள்இல்லத்தின் கண்காணிப்பாளரிடமிருந்து ஒரு ’தனிப்பட்ட பராமரிப்புத் திட்டம்’ மற்றும் ‘புனா்வாழ்வு அட்டை’ ஆகியவற்றைக் கேட்டுப் பெற வேண்டும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை குழந்தையின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து, தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும் வேண்டும். திருப்தியற்ற வகையில் அமலாக்கம் செய்திருந்தால் தேவையான உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டும்.
அந்தக் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனத்தை விட்டு வெளியேறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, இது போன்ற குழந்தைகளுக்கான பிற்காலப் பராமரிப்பை பரிந்துரைக்கும் திட்டத்தை உருவாக்குவதை அனைத்து ஜேஜேபிகளும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், விடுவிக்கப்படுவதற்கு இரு மாதங்களுக்கு முன் குழந்தையானது ஜேஜேபியிடம் ஆஜா்படுத்தப்பட வேண்டும். தில்லியில் காலியாக உள்ள 7 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பணியிடங்களை 6 வாரங்களுக்குள் நிரப்ப நகர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜனவரி 21-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.