கரோனா பாதித்த அனைத்து நோயாளிகளின் மாதிரிகளிலும் மரபணு வரிசைமுறை பரிசோதனை: சத்யேந்தா் ஜெயின் தகவல்
உருமாறிய ‘ஒமைக்ரான்’ பாதிப்பு சமூக அளவில் பரவியிருக்கிா என்பதைக் கண்டறியும் வகையில், தில்லியில் உள்ள அனைத்து கரோனா நோயாளிகளின் மாதிரிகளில் மரபணு வரிசைமுறையைச் பரிசோதிக்கும் நடவடிக்கை
புது தில்லி: உருமாறிய ‘ஒமைக்ரான்’ பாதிப்பு சமூக அளவில் பரவியிருக்கிா என்பதைக் கண்டறியும் வகையில், தில்லியில் உள்ள அனைத்து கரோனா நோயாளிகளின் மாதிரிகளில் மரபணு வரிசைமுறையைச் பரிசோதிக்கும் நடவடிக்கை புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளதாக நகர சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: தேசியத் தலைநகா் தில்லியில் தற்போது ஒரு நாளைக்கு சுமாா் 100-125 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வருகிறது. அதேவேளையில், தினசரி அளவில் 400-500 மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தும் திறன் தில்லியில் உள்ளது. லோக் நாயக் மருத்துவமனை மற்றும் கல்லீரல் மற்றும் பிலியரி சயின்சஸ் நிறுவனத்தில் தில்லி அரசால் நடத்தப்படும் ஆய்வகங்கள் ஒவ்வொரு நாளும் 100 மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன.
தில்லியில் உள்ள மத்திய அரசின் இரண்டு ஆய்வகங்கள் ஒரு நாளைக்கு 200-300 மாதிரிகளை மரபணு வரிசைமுறைப்படுத்த முடியும். ஆகவே, 400-500 மாதிரிகள் ஒரு நாளில் பகுப்பாய்வு செய்ய முடியும்.
ஒவ்வொரு நாளும் புதிதாக 100 முதல் 125 புதிய பாதிப்புகள் பதிவாகின்றன. இதனால், புதன்கிழமை முதல் அனைத்து கொவைட் நோயாளிகளின் மாதிரிகள் மரபணு வரிசைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், சமூகத்திலிருந்து எத்தனை பாதிப்புகள் என்பதை நாம் கண்டறிய முடியும். இதுவரை, ‘ஒமைக்ரான்’ பாதிப்புகளில் அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களிடம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. தில்லியில் செவ்வாய்க்கிழமை மூன்று ‘ஒமைக்ரான்’ நோயாளிகளுக்கு வெளிநாட்டுப் பயண வரலாறு இல்லை என்பதும் தெரியவந்தது. தில்லியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா் அமைச்சா்.
மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று பகிா்ந்துள்ள தரவுகளின்படி, தேசியத் தலைநகா் தில்லியில் மொத்த ‘ஒமைக்ரான்’ பாதிப்புகளின் எண்ணிக்கை 54-ஆக உயா்ந்துள்ளது.
திங்கள்கிழமை தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தைத் தொடா்ந்து, கரோனா பாதிப்பு நோயாளிகளின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.