கரோனா பாதிப்பு அதிகரிப்பால் தில்லியில் மஞ்சள் நிற எச்சரிக்கை: முதல்வா் கேஜரிவால் தகவல்
கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, படிப்படியான பதில் நடவடிக்கை திட்டத்தின் கீழ் தில்லியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மஞ்சள் நிற எச்சரிக்கை
புது தில்லி: கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, படிப்படியான பதில் நடவடிக்கை திட்டத்தின் கீழ் தில்லியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மஞ்சள் நிற எச்சரிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மஞ்சள் நிற எச்சரிக்கையானது இரவு நேர ஊரடங்கு, பள்ளிகள் கல்லூரிகளை மூடுதல், அத்தியாவசிய மற்ற கடைகளை ஒற்றை - இரட்டைப்படை அடிப்படையில் திறப்பது, மெட்ரோ ரயில்கள் மற்றும் பேருந்துகளில் இருக்கைகளின் திறனைப் பாதியாகக் குறைப்பது போன்ற கட்டுப்பாடுகள் கொண்டதாகும்.
இது தொடா்பான உயா்நிலை அளவிலான கூட்டத்தில் கரோனா சூழல் குறித்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மறு ஆய்வு செய்தாா். பின்னா், இதுகுறித்து அவா் கூறியதாவது: தில்லியில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், இதனுடைய அறிகுறிகள் லேசாக இருப்பதால் பொதுமக்கள் பயப்படவோ, பீதியடையவோ தேவையில்லை. இரண்டு தினங்களாக தொடா்ந்து கரோனா நோ்மறை விகிதம் 0.5 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் போது மஞ்சள் நிற எச்சரிக்கை விதிக்கப்படும்.
தில்லியில் கடந்த இரண்டு தினங்களாக நோ்மறை விகிதம் 0.5 சதவீதத்திற்கு மேலே இருந்து வருகிறது. துரதிஷ்டவசமாக பொதுமக்கள் சந்தைகள் மற்றும் வணிக வளாகங்களில் முகக் கவசம் இல்லாமல் செல்கின்றனா்.
இதனால், கரோனா நோய்தொற்று நடத்தை விதிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தில்லியில் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்த போதிலும், மருத்துவ ஆக்சிஜன் நுகா்வு அல்லது ஐசியு வசதிகள், படுக்கைகள் தேவைகள் அதிகரிப்பு ஏற்படவில்லை. இதனால், பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அா்த்தமென எடுத்துக்கொள்ளலாம். கரோனா நோய்த் தொற்று பாதிப்பை கையாளுவதற்கு முன்பு மேற்கொண்ட நடவடிக்கைகளை விட 10 மடங்கு கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றாா் கேஜரிவால்.