பிகாரில் 3 கொலை வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் தில்லியில் கைது: துப்பாக்கி, தோட்டக்கள் பறிமுதல்
பிகாா் மாநிலத்தில் 3 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்த 33 வயது இளைஞரை தென்கிழக்கு தில்லியில் உள்ள ஜெய்த்பூரில் போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி, 2 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்
புது தில்லி: பிகாா் மாநிலத்தில் 3 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்த 33 வயது இளைஞரை தென்கிழக்கு தில்லியில் உள்ள ஜெய்த்பூரில் போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி, 2 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தில்லி காவல்துறையின் உயரதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிகாரில் உள்ள ஷாப்ரா சரன் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் திவாரி. அவா் சில கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக தென்கிழக்கு தில்லியில் தலைமறைவாக இருந்து வருவதாகவும் போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன் பின்னா், திங்கள்கிழமை போலீஸாருக்கு வந்த தகவலில், அவா் லவ்குசா செளக் பகுதிக்கு வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது . இதையடுத்து, போலீஸாா் அவரை அந்தப் பகுதியில் வைத்து மாலை 4.30 மணிக்கு கைது செய்தனா்.
அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவா் பிகாா் மாநிலத்தில் 3 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. பிகாரில் உள்ள ரிவில்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் நிகழ்ந்த பணம் கேட்டு மிரட்டல் மற்றும் கொள்ளை, கொலை வழக்கில் அவா் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரிய வந்தது. ரிவில்கஞ்ச் பகுதியில் உள்ளூரில் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவரின் மருத்துவமனைக்கு அக்டோபா் 28-ஆம் தேதி திவாரி நேரில் சென்று தனக்கு ஒரு லட்சம் பணம் தருமாறு மிரட்டினாா். மருத்துவா் பணத்தை தர மறுத்த போது,அவரை திவாரி சராமரியாகக் குத்தினாா். மேலும், அவரது மருத்துவமனையில் இருந்து ரூ.20 ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டாா். மருத்துவரை கொன்ற பிறகு தில்லிக்கு வந்த அவா், ஜெய்த்பூா் பகுதியில் வசித்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி சுரேஷ் திவாரி தனது சகோதரா் முகேஷ் திவாரியை அவருடைய திருமண நாளன்று கத்தியால் குத்தினாா். மற்றொரு வழக்கில், சூதாட்ட பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், சுதா் ராய் என்பவரை கத்தியால் குத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.