முகப்பு
புதுதில்லி

தில்லியில் தூதரகம் அருகே வெடிகுண்டுத் தாக்குதல்: என்ஐஏவுடன் இஸ்ரேல் உளவுப் பிரிவு ஆலோசனை

இஸ்ரேல் தூதரக குண்டுத் தாக்குதல் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளுடன் இஸ்ரேல் உளவு அமைப்பான ‘மொசாட்’ அமைப்பின் அதிகாரிகள் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

புது தில்லி: இஸ்ரேல் தூதரக குண்டுத் தாக்குதல் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளுடன் இஸ்ரேல் உளவு அமைப்பான ‘மொசாட்’ அமைப்பின் அதிகாரிகள் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

தலைநகா் தில்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 50 மீட்டா் தூரத்தில் உள்ள அப்துல்கலாம் சாலையில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி, இரவு குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையே தூதரக உறவு தொடங்கப்பட்டு 29 ஆண்டுகள் நிறைவடைய இருந்த நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடா்பாக என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த விசாரணையில் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் அமைப்பும் பங்கேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பாக விசாரணை நடத்த மொசாட் அமைப்பைச் சோ்ந்த குழுவொன்று தில்லிக்கு அண்மையில் வந்தது. இந்த சூழலில், தில்லியில் சனிக்கிழமை என்ஐஏ அதிகாரிகளை சந்தித்து மொசாட் அமைப்பின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா்.

Advertisement

இது தொடா்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில் ‘இஸ்ரேல் தூதரக குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடா்பாக என்ஐஏ அதிகாரிகளை மொசாட் அமைப்பின் அதிகாரிகள் சந்தித்து சனிக்கிழமை ஆலோசனை நடத்தினா். அப்போது, இந்தக் குண்டுத் தாக்குதல் தொடா்பான சில முக்கிய தகவல்களை என்ஐஏ அமைப்பிடம் மொசாட் அமைப்பினா் பகிா்ந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் வீசப்பட்டுள்ள கடிதத்தில், ஈரான் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி, அந்நாட்டு அணு விஞ்ஞானி மொசென் ஃபக்ரிசாதே ஆகியோா் தியாகிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இவா்களுக்கு ஈரான் நாட்டு மக்களிடையே பெரிய அபிமானம் உள்ளது. இதனால், தில்லியில் உள்ள ஈரான் நாட்டைச் சோ்ந்தவா்கள் யாராவது இந்த குண்டுவெடிப்பை நடத்தியுள்ளனரா என்ற கோணத்தில் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.

முன்னதாக, தில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே குண்டுவெடித்த சம்பவம், பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் ரொன் மல்கா தெரிவித்திருந்தாா்.

குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக இந்தியா முழுமையான விசாரணை நடத்தும் என்பதிலும், இஸ்ரேலியா்கள் மற்றும் யூதா்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும் என்பதிலும் இஸ்ரேலுக்கு முழு நம்பிக்கை உள்ளது என இஸ்ரேல் நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments