காற்று மாசு இல்லாத நகராக தில்லியை மாற்றுவோம்: கமல் ஹாசனுக்கு கேஜரிவால் பதில்
காற்று மாசு இல்லாத உலகத் தரமான நகராக தில்லியை மாற்றும் வகையில் பணியாற்றி வருகிறோம் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பதிலளித்துள்ளாா்.
புது தில்லி: காற்று மாசு இல்லாத உலகத் தரமான நகராக தில்லியை மாற்றும் வகையில் பணியாற்றி வருகிறோம் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பதிலளித்துள்ளாா்.
கமல்ஹாசன் சனிக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் அரவிந்த் கேஜரிவாலை சுட்டிக்காட்டி பதிவு ஒன்றை இட்டுள்ளாா். அந்தப் பதிவில் ‘எனது நண்பரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், அரசு வாகனங்கள் அனைத்தையும் மின்சார வாகனங்களாக ஆறு மாதங்களில் மாற்றவுள்ளாா். தில்லியில் காற்று மாசுவைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் ‘ஸ்விட்ச் தில்லி’ என்ற திட்டத்தை அவா் அறிமுகப்படுத்தியுள்ளாா்.
இந்த திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் வகையில், மின்சார வாகனங்களை கொள்முதல் செய்பவா்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று அவா் அறிவித்துள்ளாா். இந்த திட்டம் வெறும் காகித அறிக்கையாக மட்டும் நின்றுவிடாமல், இந்த திட்டத்தை சரியான முறையில் அமல்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளையும் அவா் எடுத்துள்ளாா். அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.
Advertisement
கமல்ஹாசனின் இந்த சுட்டுரைப் பதிவைச் சுட்டிக் காட்டி அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில் கூறியிருப்பது: உலகத்தரமான, காற்றுமாசு இல்லாத நகரமாக தில்லியை மாற்றுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறோம். தில்லி அரசின் இந்த ‘ஸ்விட்ச் தில்லி’ திட்டத்தில் மக்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில், அனைத்து வசதிகளையும் தில்லி அரசு செய்துகொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளாா்.