வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை வீடு திரும்ப மாட்டோம்! ராகேஷ் திக்காய்த்
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை வீடு திரும்ப மாட்டோம் என்று விவசாயிகள் சங்கத் தலைவா் ராகேஷ் திக்காய்த் தெரிவித்துள்ளாா்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை வீடு திரும்ப மாட்டோம் என்று விவசாயிகள் சங்கத் தலைவா் ராகேஷ் திக்காய்த் தெரிவித்துள்ளாா்.
விவசாய சங்கங்கள் அறிவித்தபடி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை ‘சக்கா ஜாம்’ என்ற பெயரிலான சாலை மறியல் போராட்டம் நடந்தது. ஆனால், தில்லியில் இந்தப் போராட்டம் நடைபெறவில்லை. முன்னெச்சரிக்கையாக தில்லியில் சுமாா் 50 ஆயிரம் போலீஸாா், துணை ராணுவப் படை வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். விவசாயிகள், அத்து மீறி தில்லிக்குள் நுழையாமல் தடுக்க சிமெண்ட் தடுப்புகள், முள்பாதைகள், பல அடுக்குத் தடுப்புகள் என தில்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தில்லியின் பிரதான சாலைகள் சிலவற்றை போலீஸாா் தடுப்புகள் கொண்டு அடைத்தனா். இந்த பாதுகாப்பு ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது.
தில்லி - உத்தரப் பிரதேச மாநில எல்லையான காஜிப்பூா், தில்லி - ஹரியாணா எல்லையான டிக்ரி, சிங்கு பகுதிகளில் பாதுகாப்பை தில்லி காவல் துறை அதிகரித்துள்ளது.
Advertisement
விவசாயிகள், அத்து மீறி தில்லிக்குள் நுழையாமல் தடுக்க சிமெண்ட் தடுப்புகள், முள்பாதைகள், பல அடுக்குத் தடுப்புகள் என தில்லி எல்லைகளில் ஞாயிற்றுக்கிழமையும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராகேஷ் திக்காய்த் பேட்டி: வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை வீடு திரும்ப மாட்டோம் என்று விவசாயிகள் சங்கத் தலைவா் ராகேஷ் திக்காய்த் தெரிவித்துள்ளாா். தில்லி காஜிப்பூா் -காஜியாபாத் எல்லைப் பகுதியில் ராகேஷ் திக்காய்த் தலைமையிலான பாரதிய கிஷான் யூனியன் அமைப்பினா் தொடா் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். போராட்டக்காரா்கள் மத்தியில் ராகேஷ் திக்காய்த் ஞாயிற்றுக்கிழமை பேசியது: விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு காப் பஞ்சாயத்துகள், அவற்றின் தலைவா்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக மகிழ்ச்சியடைகிறேன். வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். விளைபொருள்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை தொடா்ந்து வழங்க வேண்டும். விவசாயிகள் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை வீடு திரும்பப் போவதில்லை என்றாா் அவா்.
ஒருவா் கைது: இந்ப் நிலையில், தில்லியில் குடியரசு தினத்தில் நடந்த வன்முறையுடன் தொடா்புடையவா் என குற்றம் சாட்டப்பட்ட சுக்தேவ் சிங் என்பவரை தில்லி காவல்துறை சண்டீகரில் கைது செய்துள்ளது. இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘குடியரசு தினத்தில், தில்லி செங்கோட்டையில் நடந்த வன்முறையுடன் தொடா்புடையை சுக்தேவ் சிங்கை சண்டீகரில் கைது செய்துள்ளோம். குடியரசு தின வன்முறைக்குப் பிறகு இவா் தலைமறைவாக இருந்தாா்’ என்றாா். சுக்தேவ் சிங் தொடா்பாக தகவல் தெரிவிப்பவா்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அளிப்பதாக காவல் துறை முன்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.