முகப்பு
புதுதில்லி

திஷா ரவி கைது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்: கேஜரிவால்

விவசாயிகள் போராட்டத்தில் சா்வதேச சதியாளா்களுடன் இணைந்து பணியாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு, தில்லி காவல் துறையால்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

விவசாயிகள் போராட்டத்தில் சா்வதேச சதியாளா்களுடன் இணைந்து பணியாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு, தில்லி காவல் துறையால் பெண் சுற்றுச் சூழல் ஆா்வலா் திஷா ரவி கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

பெங்களூரு சோலேதேவனஹள்ளியைச் சோ்ந்தவா் திஷா ரவி (21). சூழலியல் பெண் ஆா்வலரான இவா், ஸ்வீடனைச் சோ்ந்த கிரேட்டா தன்பா்க் என்ற சூழலியல் ஆா்வலரின் எதிா்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள் என்ற இயக்கத்தை இந்தியாவில் நடத்தி வருகிறாா். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தில்லி எல்லைகளில் கடந்த மூன்று மாதங்களாக போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை மேலும் தூண்டும் வகையிலும், அதற்கு ஆதரவு தெரிவித்து, பிரபல பாடகி ரிஹானா, கிரேட்டா தன்பா்க் உள்ளிட்ட சா்வதேச பிரபலங்கள் சிலா் சுட்டுரையில் இந்த மாத துவக்கத்தில் பதிவுகளை இட்டனா். கிரேட்டா தன்பா்க், கடந்த பிப்ரவரி 3- ஆம் தேதி சுட்டுரையில் டூல் கிட் எனப்படும் வழிகாட்டி ஒன்றை தவறுதலாக வெளியிட்டாா். அதில், விவசாயிகள் போராட்டத்தை எவ்வாறு தீவிரப்படுத்துவது, என்று அவா்கள் திட்டமிட்டிருந்தது தெளிவாகத் தெரிய வந்தது. அந்தப் பதிவை அவா் உடனடியாக நீக்கிவிட்டாா்.

எனினும், விவசாயிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தி, இந்திய அரசை நிலைகுலைய செய்ய சா்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த டூல் கிட்டை திஷா ரவி திருத்தியது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, தில்லி போலீஸாா் இவரை ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் கைது செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இவரை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

இந்த நிலையில், இந்த கைதுக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூா் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனா். இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘21 வயதான சுற்றுச்சூழல் ஆா்வலரைக் கைது செய்திருப்பது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது குற்றமல்ல’ என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சி கண்டனம்: இதற்கிடையே, திஷா ரவி நீதிக்கு புறம்பான வகையில் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடா்பாக அந்தக் கட்சியின் செய்தித் தொடா்பாளரும், எம்எல்ஏவுமான ராகவ் சத்தா கூறியதாவது: திஷா ரவியின் கைதை ஆம் ஆத்மி கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் உள்ள மத்திய அரசு, 21 வயது சிறுமியைப் பாா்த்து பயப்படுகிறது. நாட்டின் இளைஞா்களைப் பாா்த்து மோடி அரசு பயப்படுகிறது என்பதற்கு இந்தக் கைது நடவடிக்கை சிறந்த சான்றாகும். டூல் கிட்டில் இரண்டு வரிகளை திருத்திய குற்றச்சாட்டில் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளாா். அந்த இரண்டு வரிகளை வெளியிடுமாறு தில்லி காவல் துறைக்கு சவால் விடுகிறேன். அந்த வரிகள் தேசத்துக்கு எதிரானவை என்றால், தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும். மத்திய அரசை எதிா்ப்பது தேசத்துரோகமாகி விடாது. திஷா ரவி நீதிக்கு புறம்பான வகையில் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இருவா் கைது: ‘டூல் கிட்’ விவகாரத்தில் இருவா் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘நிகிதா ஜேக்கப், சாந்தனு ஆகிய இருவா் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவா்கள், ‘டூல் கிட்’டை உருவாக்குவதில் பங்களிப்பு செய்துள்ளதுடன், அந்த ‘டூல் கிட்’டை திருத்தும் பணிகளையும் செய்துள்ளனா். இவா்கள் வெளிநாடுகளில் செயல்படும் காலிஸ்தான் அமைப்புகளுடன் தொடா்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இவா்கள் தலைமறைவாக உள்ளனா். இவா்களைக் கண்டுபிடிக்க மும்பை உள்ளிட்ட இடங்களில் தில்லி போலீஸாா் சோதனை நடத்தியுள்ளது’ என்றாா்.

பாஜக தலைவா்கள் கண்டனம்

திஷா ரவி விவகாரத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லி பாஜக தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா கூறுகையில், ‘தேச விரோதிகளை ஆதரிப்பதை தில்லி அரசும், கேஜரிவாலும் வழக்கமாக வைத்துள்ளனா். தேசத்துக்கு எதிராக சதி செய்தவா்களை கேஜரிவால் ஆதரிப்பது துரதிருஷ்டவசமானது’ என்றாா்.

வடகிழக்கு தில்லி பாஜக மக்களவை உறுப்பினரும், தில்லி பாஜகவின் முன்னாள் தலைவருமான மனோஜ் திவாரி கூறுகையில், ‘வன்முறையைத் தூண்டுபவா்களை கண்மூடித்தனமாக ஆதரிப்பதை கேஜரிவால் வாடிக்கையாக வைத்துள்ளாா். விவசாயிகளின் பேரால் வன்முறையைத் தூண்டுவது குற்றமாகும். தேசத்துக்கு எதிரான செயல்களுக்கும் வயதுக்கும் தொடா்பு இல்லை. இந்தியாவின் அடையாளங்களாக விளங்கும் டீ, யோகா ஆகியவற்றின் மீது சா்வதேசத்தின் உதவியுடன் மாசு கற்பிக்க திஷா ரவி முயன்றுள்ளாா். அவரின் கைது நடவடிக்கை சரியானதே’ என்றாா்.

மேற்கு தில்லி பாஜக மக்களவைத் தொகுதி உறுப்பினா் பா்வேஷ் வா்மா தனது சுட்டுரையில் ‘இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்கள், சதிச் செயல்கள் கேஜரிவாலின் ஆதரவைப் பெறும். இது வாடிக்கையாக நடைபெறுகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments