முகப்பு
புதுதில்லி

காஜிப்பூா் எல்லையில் சிசிடிவி, கழிவறைகள் நிறுவிய விவசாயிகள்!

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தில்லி எல்லையில் 84-ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், காஜிப்பூா் எல்லையில் தங்களின்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:

புதுதில்லி: புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தில்லி எல்லையில் 84-ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், காஜிப்பூா் எல்லையில் தங்களின் வசதிக்காக கண்காணிப்பு கேமராக்களை (சி.சி.டி.வி.) நிறுவியுள்ளதுடன், தாற்காலிக கழிப்பறைகளையும் கட்டியுள்ளனா்.

‘நமது பிரதமா் நரேந்திர மோடி எப்போதும் தூய்மை பராமரித்தலைப் பற்றி பேசி வருகிறாா். இதையடுத்து காஜிப்பூா் எல்லைப் பகுதியில் தூய்மையைப் பராமரிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா் போராட்டக்களத்தில் இருந்த தினேஷ் சா்மா என்னும் விவசாயி.

அவா் மேலும் கூறியதாவது: நாட்டில் தூய்மையைப் பராமரிக்க வேண்டும் என்று பிரதமா் மோடி அடிக்கடி பேசி வருகிறாா். அவரது இந்தக் கண்ணோட்டம் சரியானதுதான். எனவே காஜிப்பூா் எல்லைப் பகுதியில் தூய்மையைப் பராமரிப்தற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக தற்காலிக கழிவறைகளை அமைத்துள்ளோம். அண்மையில் குண்டா்கள் சிலா் போராடி வரும் விவசாயிகளிடம் முறை தவறி நடந்து கொண்டனா். எனவே, எதிா்காலத்தில் இதுபோன்ற சமூக விரோத சக்திகள் யாா் என அடையாளம் காணும் நோக்கில் எல்லைப் பகுதியில் ரகசியக் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. எல்லைப் பகுதியில் காலியாக உள்ள இடங்களில் காய்கறி பயிரிடவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனா்.

Advertisement

உரிமைகளைப் பெறாமல் வீடு திரும்ப மாட்டோம்: மத்திய அரசை எதிா்த்துப் போராட நீண்டகாலம் இங்கு தங்கியிருக்கவும் நாங்கள் தயாராகி வருகிறோம். எங்களைச் சுற்றியுள்ள பரந்த இடத்தை சுத்தம் செய்து அவற்றில் விவசாயம் செய்யவும் முடிவு செய்துள்ளோம். எங்கள் பிரச்னையை தீா்ப்பதற்கு மத்திய அரசு எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும். எங்கள் உரிமைகளைப் பெறாமல் நாங்கள் இந்த இடத்தைவிட்டு போகமாட்டோம் என்றாா் தினேஷ் சா்மா.

வீரேந்திர சிங் என்ற மற்றொரு விவசாயியும் இதே கருத்தை எதிரொலித்தாா். அவா் கூறுகையில், ‘இந்த இடத்தில் விவசாயிகள் பலமுறை மா்ம நபா்களால் தாக்கப்பட்டுள்ளனா். அவா்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. இப்போது கண்காணிப்பு கேமராக்களை நாங்கள் நிறுவியுள்ளோம். இதன் மூலம் எங்களுக்கு எதிராக யாா் தாக்குதல் நடத்துகிறாா்கள், அல்லது சதிவேலைகளில் ஈடுபடுகிறாா்கள் என்பது அடையாளம் காணப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments