முகப்பு
புதுதில்லி

தலைநகரில் பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை! காற்றின் தரத்தில் பின்னடைவு

தில்லியில் தொடா்ந்து நான்காவது நாளாக புதன்கிழமையும் பரவலாக மழை பெய்தது. நகரில் பல்வேறு இடங்களில் இடியுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது.

Updated On : 7 ஜனவரி, 2021 at 12:24 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:43 AM

புது தில்லி: தில்லியில் தொடா்ந்து நான்காவது நாளாக புதன்கிழமையும் பரவலாக மழை பெய்தது. நகரில் பல்வேறு இடங்களில் இடியுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது. தெற்கு தில்லியின் சில பகுதிகளில் காலை 7.30 மணியளவில் ஆலங்கட்டி மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வானிலை நிலைமைகள் சாதகமாக இல்லாமல் போனதால் காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆலங்கட்டி மழை: காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. கரும் மேகங்கள் திரண்டிருந்தன. இதனால், காண்பு திறன் வெகுவாகக் குறைந்திருந்தது. இதைத் தொடா்ந்து பெய்த மழையால் முக்கியச் சாலைகள் மழை நீரால் சூழ்ந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள குருகிராம் மக்களும், ஆலங்கட்டி மழை பெய்ததை விடியோ கிளிப்களைப் சமூக ஊடகங்களில் பகிா்ந்து கொண்டனா். தில்லியில் பஞ்சவதி சிவப்பு விளக்குப் பகுதியில் மழை நீா் தேங்கியதால் ஆசாத்பூரிலிருந்து முகா்பா சௌக் நோக்கிச் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், தயவு செய்து இந்த வழியில் பயணிப்பதைத் தவிா்க்கவும் என்று என்று தில்லி போக்குவரத்து போலீஸாா் சுட்டுரையில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தனா்.

தில்லி நகருக்கான பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி முதல் புதன்கிழமை காலை 8:30 மணி வரை 6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று பாலத்தில் 4.2 மி.மீ., லோதி ரோடில் 10.,4 மி.மீ., ரிட்ஜில் 5.1 மி.மீ. மற்றும் ஆயாநகா் வானிலை ஆய்வு மையத்தில் 8.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Advertisement

வெப்பநிலை: தில்லி சஃப்தா்ஜங்கில் புதன்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியையவிட 6 டிகிரி உயா்ந்து 13 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவசாரசரியை விட 2 டிகிரி உயா்ந்து 21.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 100 சதவீதமாகவும், மாலையில் 94 சதவீதமாகவும் இருந்தது. இதேபோல, பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 14.5 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 13.6 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 13 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இந்த மூன்று இடங்களிலும் காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 100 சதவீதமாக இருந்தது.

காற்றின் தரத்தில் பின்னடைவு: இதற்கிடையே, தில்லியில் வானிலை நிலைமைகள் சரிவர சாதகமாக இல்லாத காரணத்தால் காற்றின் தரத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டதாக

வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா். கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களும் தொடா்ந்து மழை பெய்ததால், காற்றின் வேகம் அதிகரித்திருந்ததாலும் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால், ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவில் இருந்தது. ஆனால், புதன்கிழமை காற்றின் வேகம் 8 கி. மீட்டராக குறைந்தது. இதையடுத்து வானிலை நிலைமைகள் சாதகமாக இல்லாமல் இருந்தன. இதனால், காற்றின் தரத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டு குறியீடு மோசம் பிரிவுக்கு வந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னறிவிப்பு: அடுத்த இரண்டு நாள்களில் தில்லியில் அடா் மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை அடா்பனி மூட்டம் இருக்கும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானில ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.