புதுதில்லி

கோழி இறைச்சி விற்பனைக்கு வடக்கு தில்லி மாநகராட்சி தடை

 நமது நிருபர்

புதுதில்லி: கோழிகளை பண்ணைகளில் வைத்திருப்பதற்கும், கோழி இறைச்சிகளை விற்பதற்கும், கடைகள், உணவகங்களில் பதப்படுத்தி வைப்பதற்கும் வடக்கு தில்லி மாநாகராட்சி தடை விதித்துள்ளது. தலைநகா் தில்லியில் பறவைக்காய்ச்சல் நோய் பரவலாக இருப்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் கோழி முட்டை மற்றும் இறைச்சியை பதப்படுத்தி வைத்திருந்து வாடிக்கையாளா்களுக்கு வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வடக்கு தில்லி மாநாகராட்சி தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை தலைநகா் தில்லியில் காக்கைகள் மற்றும் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய் இருப்பது அவற்றின் மாதிரிகளைச் சோதனை செய்த போது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, வெளியிடங்களிலிருந்து பதப்படுப்பட்ட மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் கோழி இறைச்சிகளை தில்லிக்கு கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தில்லியில் பறவைக்காய்ச்சல் இருப்பதாக தெரிய வந்துள்ளதை அடுத்து காஜிப்பூா் சந்தை மூடப்பட்டுள்ளதாக நிா்வாகத்தினா் அறிவித்துள்ளனா். மறு உத்தரவு வரும் வரை வடக்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அனைத்துக் கோழிப் பண்ணைகள் மற்றும் இறைச்சி விற்பனையாளா்கள் இறைச்சிகளை விற்பதற்கும், பதப்படுத்தி வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரத்தில் தில்லி நகரில் உள்ள பல்வேறு பூங்காக்களில் சுற்றித்திரிந்த காக்கைகள் மற்றும் சஞ்சய் ஏரி பகுதியில் இருந்த வாத்துகள் பறவைக் காய்ச்சல் நோய்க்கு பலியானது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் இதுவரை 50 பறவைகள் பறவைக்காய்ச்சல் நோயால் உயிரிழந்துள்ளதாக கால்நடைப் பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது. நகரில் பல்வேறு பகுதிகளிலிருந்து 18 பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பீதி வேண்டாம்: இதற்கிடையே தில்லியில் பறவைக் காய்ச்சல் நோய் பரவல் இருப்பதால் யாரும் பீதி அடையத் தேவையில்லை என்றும் இறைச்சிகளை சாப்பிடும் போது முறையான அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் தில்லி சுகாதாரத் துறை இயக்குநரகம் கூறியுள்ளது. நோய் இருக்கும் கோழிகளைத் தொட வேண்டாம், கோழிக் கழிவுகளை தொட வேண்டாம் என்றும் கோழிகளுக்கு உணவு வைக்கும் பாத்திரங்களையும் அவற்றை அடைத்து வைத்திருக்கும கூண்டுகளையும் சுத்தமாக வைத்திருக்குமாறும் சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. முட்டை மற்றும் கோழிகளை முழுமையாக சமைத்து சாப்பிடலாம், ஆனால், அரைகுறையாக சமைக்கப்ட்ட இறைச்சி உணவுகளை சாப்பிட வேண்டாம். இதேபோல சமைக்கப்பட்ட இறைச்சிக்கு பக்கத்தில் சமைக்கப்படாத இறைச்சியை வைக்க வேண்டாம். ஒவ்வொரு நபரும் தனிப்பட்ட முறையில் சுகாதாரத்தைப் பேண வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT