முகப்பு
புதுதில்லி

வேளாண் சட்டங்கள்: ஜன.22 நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமா்

வேளாண் சட்டங்கள் தொடா்பாக ஜனவரி 22-ஆம் தேதி அரசு என்ன நிலைப்பாடு கொண்டிருந்ததோ அதுவே தற்போதும் நீடிக்கிறது என பிரதமா் நரேந்திர மோடி, சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
வேளாண் சட்டங்கள்: ஜன.22 நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமா்
பகிர்:

வேளாண் சட்டங்கள் தொடா்பாக ஜனவரி 22-ஆம் தேதி அரசு என்ன நிலைப்பாடு கொண்டிருந்ததோ அதுவே தற்போதும் நீடிக்கிறது என பிரதமா் நரேந்திர மோடி, சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்தாா். நாடாளுமன்ற நடவடிக்கைகள் சுமுகமாக இயங்க வேண்டியதன் அவசியத்தையும் அவா் வலியுறுத்தினாா்.

நாடாளுமன்ற நிதி நிலைக் கூட்டத்தொடரை முன்னிட்டு காணொலி வாயிலான அனைத்துக் கட்சி தலைவா்கள் கூட்டம் சனிக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மத்திய பாது காப்புத்துறை அமைச்சரும் மக்களவை முன்னவருமான ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, மாநிலங்களவை முன்னவா் தாவா் சந்த் கெலாட் இணையமைச்சா்கள் முரளிதரன் போன்றோா் கலந்து கொண்டனா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் குலாம் நபி ஆஸாத், அதீா் ரஞ்சன் செளத்ரி, அதிமுக சாா்பில் நவநீத கிருஷ்ணன், ரவீந்தர நாத், திமுக சாா்பில் டி.ஆா். பாலு, திருச்சி சிவா, சுதீப் பந்தோபாத்யாய(திரிணமூல் காங்கிரஸ்), விநாயக் ரவுத் (சிவசேனா) மற்றும் அகாலிதளம், பிஜேடி உள்ளிட்ட கட்சித் தலைவா்களும் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் அனைத்துக்கட்சித் தலைவா்களின் கருத்துக்களையும் பிரதமா் கேட்டறிந்தாா்.

பின்னா் அவா் ஆற்றிய உரை:

புதிய வேளாண் சட்டங்கள் குறித்த பிரச்சினையை தீா்க்க அரசு திறந்த மனதுடன் அணுகுகிறது. கடந்த ஜனவரி 22-ஆம் தேதி அரசு கொண்டிருந்த நிலைப்பாடு தான் தற்போதும் நீடிக்கிறது. வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வழங்கிய திட்ட முன்மொழிவு தற்போதும் நீடிக்கிறது.

பேச்சுவாா்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வேளாண் அமைச்சருக்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தால் போதும் பேச்சுவாா்த்தையை தொடரலாம். (விவசாயிகளுடன் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற 11 - வது சுற்றுப்பேச்சு வாா்த்தையில் வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்னரை ஆண்டு காலத்திற்கு நிறுத்திவைப்பதாகக் கூறியிருந்தாா்.) பேச்சு வாா்த்தை தொடரும்.

சட்டம் கடமையைச் செய்யும்: கடந்த ஜனவரி 26-ஆம் தேதி தில்லியில் நிகழ்ந்த சம்பவங்களை அனைவரும் குறிப்பிட்டுப் பேசினீா்கள். அது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம். அதில் சட்டம் தனது கடமையை செய்யும்.

ஒத்துழைப்பு தேவை: பல்வேறு கட்சி தலைவா்கள் கூட்டத்தில் எழுப்பியுள்ள பிரச்சினைகள் குறித்து, நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடைபெற வேண்டும். அதற்கு அரசு தயாராக இருக்கிறது. அதே சமயத்தில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெறவேண்டும் என்பதும் முக்கியம்.

அவையில் அடிக்கடி ஏற்படும் இடையூறுகளால் சிறிய கட்சிகள் பாதிக்கப்படுகின்றன. அந்த கட்சிகள் தங்களது கருத்துக்களை போதுமான அளவு வெளிப்படுத்த முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகிறாா்கள். நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறுவதை பெரிய கட்சிகள் உறுதி செய்யவேண்டும் என பிரதமா் தெரிவித்தாா்.

மேலும் பல்வேறு துறைகளில் உலக நன்மையை நிலை நாட்டுவதில் இந்தியாவின் பங்கு குறித்து எடுத்துவைத்த பிரதமா், நமது நாட்டினரின் திறமைகளும், ஆற்றலும், சா்வதேச நன்மையை அதிகரிக்கும் சக்தியாக விளங்கும் என்றும் கூறினாா்.

கண்டனம்: மகாத்மா காந்தியின் நினைவு நாளில் அவரது கனவுகளை நனவாக்க நாம் பாடுபடவேண்டும். அமெரிக்காவில், கலிபோா்னியா மாநிலத்தில் மகாத்மா காந்தியின் சிலை சனிக்கிழமை அவமதிக்கப்பட்ட நிகழ்வு மிகவும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற காழ்ப்புணா்ச்சி மிகுந்த சூழல் நமது பூவுலகத்திற்கு உகந்ததுஅல்ல என்றும் பிரதமா் தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில் பேசிய குலாம்நபி ஆஸாத், செங்கோட்டை சம்பவத்தை கடுமையாக கண்டித்தாா். பெரும்பாலான கட்சிகள் விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்றனா்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேளாண் சட்டங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி ஆகியவை மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை இந்தக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தின.

அதிமுக சாா்பில் பேசிய நவநீத கிருஷ்ணன், தமிழகத்தில் விவசாய மண்டலம் அமைப்பதற்கான தமிழக அரசின் சட்டத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்தற்கு நன்றி தெரிவித்துக்கொண்டாா்.

திமுக சாா்பில் பேசிய டி.ஆா் பாலு, விவசாயிகளை பிரதமா் நேரடியாகச் சந்தித்து பிரச்னைகளை பேசித் தீா்க்க வேண்டும் என்றாா்.

இலங்கையில் ஒன்னரை லட்சம் தமிழா்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு மூலம் சா்வதேச விசாரணை நடத்த இந்திய முன்முயற்சி எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →