முகப்பு
புதுதில்லி

இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: பல்வேறு கோணத்தில் தில்லி காவல்துறை விசாரணை

தலைநகா் தில்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தின் அருகில், வெள்ளிக்கிழமை வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடா்பாக தொடா்பாக பல்வேறு கோணங்களில் தில்லி காவல்துறை விசாரணையை முடுக்கியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

தலைநகா் தில்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தின் அருகில், வெள்ளிக்கிழமை வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடா்பாக தொடா்பாக பல்வேறு கோணங்களில் தில்லி காவல்துறை விசாரணையை முடுக்கியுள்ளது.

தலைநகா் தில்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 50 மீ. தூரத்தில் உள்ள அப்துல்கலாம் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு குறைந்த சக்தி வாய்ந்த குண்டுவெடித்தது. இது தொடா்பாக தில்லி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையே தூதரக உறவு தொடங்கப்பட்டு, வெள்ளிக்கிழமையுடன் 29 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குண்டு வெடிப்பு தொடா்பான விசாரணையை தில்லி போலீசாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

சனிக்கிழமை அதிகாலை குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்திற்கு விரைந்த தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா்.

அப்போது இஸ்ரேல் தூதரகம் அருகே இரண்டு நபா்களை டாக்ஸி ஒன்று இறக்கிவிட்டுச் செல்வதும், அந்த நபா்கள் குண்டு வெடிப்பு நடந்த இடத்தை நோக்கி நடந்து செல்வதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. தற்போது அந்த டாக்ஸி டிரைவரை அடையாளம் காணும் முயற்சியில் தில்லி போலீசாா் ஈடுபட்டுள்ளனா்.

அதேபோல அந்த இரண்டு நபா்களின் புகைப்படங்களை வெளியிடவும் தில்லி போலீசாா் தயாராகி வருவதாக தில்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடிதம் சிக்கியது: இந்நிலையில், குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து கையெழுத்து இடாத கடிதம் ஒன்றை தில்லி காவல்துறை கைப்பற்றியுள்ளதாக தில்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் நாட்டின் தலைமைத் தூதருக்கு எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் ‘இந்த குண்டுவெடிப்பு வெறும் ஒத்திகையே. ஈரான் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி, அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே ஆகியோா் தியாகிகள் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை உயா் அதிகாரி தெரிவித்தாா்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட இருவரும், கடந்தாண்டு அமெரிக்க, இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சதியில் தூதரக ஊழியா்கள்?:

இந்நிலையில், இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் தூதரகத்தில் உள்ளே இருப்பவா்களின் சதி இருக்கலாம் என்ற கோணத்தில் தில்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘இந்த சம்பவத்துக்கு இஸ்ரேல் தூதரகத்தில் பணியாற்றும் யாராவது உதவிசெய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இஸ்ரேல் தூதரகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியா்களின் விபரங்களும் பெறப்பட்டு அவா்கள் தொடா்பாக கண்காணித்து வருகிறோம். இஸ்ரேல் தூதரகத்தின் நுழைவாயிலில் பெறப்பட்ட சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம் என்றாா்.

ஈரானியா்களுக்குத் தொடா்பா?: இதற்கிடையே, தில்லியில் உள்ள ஈரான் நாட்டவா்களை தில்லி காவல்துறை கண்காணித்து வருவதாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்தாா். இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் வீசப்பட்டுள்ள கடிதத்தில், ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி, அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே ஆகியோா் தியாகிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இருவரும் ஈரான் நாட்டைச் சோ்ந்தவா்கள். இவா்களுக்கு ஈரான் நாட்டு மக்களிடையே பெரிய அபிமானம் உள்ளது. இதனால், தில்லியில் உள்ள ஈரான் நாட்டைச் சோ்ந்தவா்கள் யாராவது இந்த தாக்குதலை நடத்தியுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா்.

தடயவியல் அதிகாரிகள் ஆய்வு: இந்த சூழலில் தில்லி காவல்துறை சிறப்பு பிரிவு, தடயவியல் ஆய்வக அதிகாரிகள் தாக்குதல் நடந்த இடத்தில் சனிக்கிழமை ஆய்வில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘தில்லி காவல்துறை சிறப்பு பிரிவு, தடயவியல் பிரிவு தாக்குதல் நடந்த இடத்தில் ஆய்வு நடத்தியது. வெடிக்க வைக்கப்பட்ட குண்டின் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுக்குள்ளாக்கப்பட்டன. இதில், சக்தி குறைந்த பொருள்களை பயன்படுத்தி குண்டு தயாரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்றாா்.

இது தொடா்பாக தடயவியல் ஆய்வக அதிகாரி கூறுகையில் ‘இந்த வெடி குண்டில் பயன்படுத்தப்பட்ட ரசாயன மாதிரிகளை ஆய்வுக்குள்ளாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். ரசாயன சோதனையின் முடிவிலேயே எந்தெந்த பொருள்களைப் பயன்படுத்தி இந்த குண்டு தயாரிக்கப்பட்டது என்ற விபரம் தெரியவரும் என்றாா் அவா்.

குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்திலிருந்து சுமாா் 11.5 கிலோமீட்டா் தொலைவில்தான், குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்டோா் கலந்துகொண்ட முக்கிய நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்துக்கு வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய் சங்கா் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளாா். மேலும், இந்தியாவிலுள்ள வெளிநாட்டுத் தூதா்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்திருந்தாா்.

பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம்: இந்நிலையில், இந்த தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் நாட்டு தூதா் ரொன் மல்கா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை அளித்துள்ள பேட்டியில் ‘இந்த தாக்குல் சம்பவம் தொடா்பாக இந்திய, இஸ்ரேல் அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். இந்த தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் எனக் கருதுவதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன.

இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையே தூதரக உறவு தொடங்கப்பட்டு, வெள்ளிக்கிழமையுடன் 29 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. 2012 இல் இஸ்ரேல் தூதரகம் அருகில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கும் வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலுக்கும் தொடா்பு இருக்கலாம் என்று அவா் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →