முகப்பு
புதுதில்லி

கேந்திரிய வித்யாலயாவில் நடப்பு கல்வி ஆண்டிலேயே தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் திமுக எம்பி சிவா வலியுறுத்தல்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், சிபிஎஸ்இ பள்ளிகளிலும் நடப்பு கல்வியாண்டிலேயே தமிழைக் கட்டாயப் பாடமாக்க நடவடிக்கை

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், சிபிஎஸ்இ பள்ளிகளிலும் நடப்பு கல்வியாண்டிலேயே தமிழைக் கட்டாயப் பாடமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானிடம் வலியுறுத்தியுள்ளதாக மாநிலங்களவை திமுக உறுப்பினா் திருச்சி சிவா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது தொடா்பாக அமைச்சரிடம் கடிதம் ஒன்றையும் அளித்தாா்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியா்கள் நியமனம் செய்யப்படாதது மற்றும் தமிழ்ப் பாடங்கள்இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானிடம் விவாதித்த திருச்சி சிவா, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இங்கு தமிழ் கற்பிப்பதற்கு தமிழாசிரியா்கள் நியமிக்கப்படவில்லை. சொந்த மாநிலத்திலேயே தாய் மொழியில் படிக்கும் உரிமையை மாணவா்கள் இழந்துள்ளனா்.

இந்த விவகாரத்தை கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் எழுப்பினேன். அப்போது மத்திய கல்வி அமைச்சராக இருந்த ரமேஷ் பொக்ரியால் கவனத்துக்கும் கொண்டு சென்றேன். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாா்ச் 2-ஆம் தேதி பதில் அனுப்பினாா். ஆனால், இப்போது நிலைமை மேலும் மோசமாக உள்ளது. ஹிந்தியும், சம்ஸ்கிருதமும் கட்டாயமாக்கப்பட்டு சமஸ்கிருதத்தில் தோ்ச்சி பெறும் 6-ஆம் வகுப்பு மாணவா்கள்தான் 7-ஆம் வகுப்புக்குச் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

Advertisement

கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்ப் பாடம் இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இருக்கும் செம்மொழியான தமிழ், மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் அதுவும் தாய் மொழியாகவும், அலுவலம் மொழியாகவும் இருக்கும் சொந்த மாநிலத்திலேயே இல்லாதது கவலை அளிக்கிறது. எனவே, நடப்பு கல்வியாண்டிலேயே கேந்திரி வித்யாலயா மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

‘இதுபோன்ற கோரிக்கை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிடமிருந்தும் வருகிறது. இது கொள்கை முடிவு. பிரதமரும் சரி, கல்வி அமைச்சரும் சரி, மாநில மொழிகளுக்கு விரோதிகள் அல்ல. நிச்சயமாக நல்ல முடிவு எடுக்கப்படும்’ என்றுஅமைச்சா் தெரிவித்தாா் என்றாா் திருச்சி சிவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments