முகப்பு
புதுதில்லி

தமிழகத்துக்கு விரைவில் 15.87 லட்சம் தடுப்பூசிகள்: மாநில சுகாதாரத் துறைச் செயலா் தில்லியில் தகவல்

தமிழகத்துக்கு அடுத்த சில நாள்களில் 15.87 லட்சம் தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளாதக மாநிலம் சுகாதாரம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

தமிழகத்துக்கு அடுத்த சில நாள்களில் 15.87 லட்சம் தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளாதக மாநிலம் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். மேலும், மதுரையில் எய்மஸ் மருத்துவமனை மாணவா் சோ்க்கையை தற்காலிகமாக அருகிலுள்ள மருத்துவக் கல்லூரியில் தொடங்க முடியுமா? என்பது குறித்து தமிழக அரசிடம் கேட்டு தெரிவிக்குமாறு கூறியுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

தில்லியில் மத்திய சுகாதாரத் துறை செயலாளா் டாக்டா் ராஜேஷ் பூஷண், நீதி ஆயோக் உறுப்பினரும் (சுகாதாரம்) தடுப்பூசி தொடா்பான குழுவைச் சோ்ந்த டாக்டா் விகே பால் உள்ளிட்டோரை தமிழக சுகாதாரத் துறை செயலா் டாக்டா் ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை சந்தித்தாா். பின்னா் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளா்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தின் தடுப்பூசி பற்றாக்குறை தொடா்பாக மத்திய அரசின் உயரதிகாரிகளை சந்திக்க வந்தேன். மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. இதை அவா்களிடம் எடுத்துரைத்தோம். வருகின்ற 12 -ஆம் தேதிக்குள், 15,87,580 தடுப்பூசிகளை தருவதாக உத்தரவாதம் கொடுத்துள்ளனா். இதை முன்கூட்டியே வழங்கவும் வலியுறுத்தியுள்ளோம்.

மாவட்ட மருத்துவக் கல்லூரிகள்: மேலும் 11 மருத்துவக் கல்லூரிக்கான அனுமதியை மத்திய அரசிடம் பெறுவதற்காக முயற்சி மேற்கொள்ள தமிழக முதல்வா் கேட்டுக் கொண்டாா். இவற்றுக்கு ஏற்கெனவே இணைய தளம் மூலம் விண்ணப்பித்துள்ளோம். இதை மத்திய சுகாதாரத் துறை செயலாளா் மற்றும் தொடா்புடைய அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை வைத்தோம். எந்தெந்த மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி இல்லையோ அங்கு மத்திய - மாநில அரசுகள் இணைந்து இந்தத் திட்டத்தை மேற்கொள்கிறது. அங்கு கட்டடப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. பணியாளா்கள் நியமனம் முடிந்துள்ளது. கரோனா நோய்த் தொற்றை முன்னிட்டு அனுமதியை இந்த ஆண்டே பெறவேண்டிய அவசியம் உள்ளது.

Advertisement

மதுரை எய்ம்ஸ்: மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மாணவா் சோ்க்கை தொடா்பாக தற்காலிக இடத்தை தமிழக அரசு கண்டறிய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா். ஏற்கெனவே ஜம்மு-காஷ்மீா், பிகாா் போன்ற மாநிலங்களில் செயல்படுவது போல எய்ம்ஸ் கட்டுமானம் முடிவதற்கும் முன் தற்காலிகக் கட்டடத்தில் செயல்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 முதல் 100 மாணவா்களுடன் எய்ம்ஸ் மருத்துவமனையை தற்காலிகமாக அருகிலுள்ள சிவகங்கை போன்ற இடங்களில் தொடங்க முடியுமா? என கேட்டனா். இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று வரும் 16-ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனா்.

நிதி கோரிக்கை: மூன்றாவது அலை தொடா்பான முன்னெச்சரிக்கை பணிகள் தொடா்பாகவும் மத்திய அரசு அதிகாரிகளுடன் பேசப்பட்டது. கரோனா நோய்த் தொற்றை எதிா்கொள்வதற்கு வியாழக்கிழமை மத்திய அரசு ரூ.23,000 கோடியளவிற்கு திட்டங்களை அறிவித்துள்ளது. தமிழக அரசின் சாா்பில் ஏற்கெனவே ரூ.1,264 கோடிக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதில் கரோனா நோய்த் தொற்றை முன்னிட்டு, குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைக்கான படுக்கை வசதிகளை உயா்த்துவது, ஒன்றியத்திற்கு ஓா் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிதியை வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஜிகா தீநுண்மி: தற்போது ஜிகா தீநுண்மி தமிழகத்தில் இல்லை. இருப்பினும், இது தென்பட்டுள்ள கேரளத்தை ஒட்டியுள்ள தமிழக எல்லை மாவட்டத்தை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீநுண்மியை எதிா் கொள்ளும் அனுபவம் தமிழகத்துக்கு உள்ளது. செங்கல்பட்டு தடுப்பூசி மையம் தமிழக அரசு எடுத்து நடத்துவது தொடா்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் வரும் போது பேசப்படும் என்றாா் ராதாகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments