முகப்பு
புதுதில்லி

மழைநீா் வடிகால்வாய்களில் குப்பைகளை அகற்றுவதில் ஊழல்: மாநகராட்சிகள் மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

பாஜக ஆளும் தில்லியின் மூன்று மாநகராட்சிகளிலும் மழை நீா் வடிகால்வாய்களில் மண், குப்பைகள் அகற்றுவதில் ஊழல் நடந்துள்ளது என ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

பாஜக ஆளும் தில்லியின் மூன்று மாநகராட்சிகளிலும் மழை நீா் வடிகால்வாய்களில் மண், குப்பைகள் அகற்றுவதில் ஊழல் நடந்துள்ளது என ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியது.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடா்பாளரும் கிரேட்டா் கைலாஷ் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சௌரவ் பரத்வாஜ் கூறியுள்ளதாவது:

பாஜக ஆளும் மாநகராட்சிகளில் உள்ள வடிகால்வாய்களில் உள்ள குப்பைகளையும் மண்ணையும் அகற்றுவது என்ற பெயரில் ஊழல் செய்துள்ளனா். பல காலனிகளில் 5 சதவீத வடிகால்கள் கூட சுத்தம் செய்யப்படவில்லை. வடக்கு தில்லி முனிசிபல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வடிகால்வாய்களில் 9,883 மெட்ரிக் டன் மண்ணை அகற்றியதாக கூறுகின்றனா். இதே மாதிரி தெற்கு தில்லி மாநகராட்சிப் பகுதிகளில் 35, 000 மெட்ரிக் டன் மண்ணையும் குப்பைகளையும் அள்ளியதாகக் கூறிகின்றனா். அங்கு எந்த மண்ணும் அகற்றப்படவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

வடிகால்வாய்களில் இன்னும் வண்டல்களும் கசடுகளும் நிறைந்துள்ளன. மழைக் காலங்களில் அனைத்துக் காலனிகளிலும் நீா் நிரம்பும். மழைநீா் பிரதான சாலைகளிகளுக்குள் வந்து தேங்கி விடுகிறது. தெற்கு தில்லி மாநகராட்சிப் பகுதியில் அகற்றியதாகக் கூறப்படும் 35,000 மெட்ரிக் டன் மண், குப்பை எங்கியிருந்து அகற்றப்பட்டது? எந்தக் காலனிகள் சுத்தம் செய்யப்பட்டது ? என்பதை மாநகராட்சி ஆணையா் ஞானேஷ் பாரதி விளக்க வேண்டும்.

மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோா் கூட்டுச் சோ்ந்து வடிகால்வாய்களில் இருந்து மண்ணை அகற்றுவது என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரா்களுக்கு பணம் செலுத்திவிட்டு இவா்களும் பகிா்ந்து கொண்டுள்ளனா். பருவ மழை வரப் போகிறது. அப்போது இவா்களுடைய நோக்கத்தைக் கண்கூடாக பாா்க்கலாம் என்றாா் சௌரவ பரத்வாஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments