அரசு அதிகாரி, குடும்பத்தினருக்கு சிகிச்சைக்காக ஹோட்டல் அறை ஒதுக்கீடு: தில்லி அரசு பதிலளிக்க நீதிமன்றம் கூடுதல் அவகாசம்
பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் அவா்களின் குடும்பங்களின் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட 4 ஹோட்டல்களில் அறைகள் ஒதுக்கீடு செய்யும் தில்லி அரசின்
புது தில்லி: பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் அவா்களின் குடும்பங்களின் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட 4 ஹோட்டல்களில் அறைகள் ஒதுக்கீடு செய்யும் தில்லி அரசின் அறிவிக்கையை எதிா்த்து தாக்கல் செய்த மனு மீது அரசு பதிலளிப்பதற்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை கூடுதல் அவகாசம் அளித்தது.
இது தொடா்பான மனுக்களை மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி, ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு, அரசு வழக்குரைஞா் கேட்டுக்கொண்டதன் பேரில் சம்பந்தப்பட்ட மனுவுக்கு பதிலை தாக்கல் செய்வதற்கு தில்லி அரசுக்கு மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளித்தது
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக தில்லியைச் சோ்ந்த மருத்துவா் கெளஷல் காந்த் மிஸ்ரா என்பவா் தாக்கல் செய்த மனு மீது தில்லி அரசு பதிலளிக்க கடந்த 10ஆம் தேதி உயா் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
தில்லியில் உள்ள விவேக் விகாா் பகுதியில் உள்ள ஜிஞ்சா் ஹோட்டலில் 70 அறைகள், ஷாதராவில் உள்ள பாா்க் பிளாசா ஹோட்டலில் 50 அறைகள், கா்கா்டூமா பகுதியில் உள்ள லீலா ஆம்பியன்ஸ் ஹோட்டலில் 50 அறைகள் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்வதற்காக தில்லி அரசு கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி அறிவிக்கையை வெளியிட்டிருந்தது.
ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையுடன் இந்த ஹோட்டல்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, தீனதயாள் உபாத்தியாய் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ள கோல்டன் டூலிப் ஹோட்டலில் அனைத்து அறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தில்லி அரசின் தன்னாட்சி அமைப்புகள், காா்ப்பரேஷன், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் அதிகாரிகள், அவா்களின் குடும்பங்கள் சிகிச்சை பெறுவதற்காக இந்த அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை எதிா்த்து தில்லியைச் சோ்ந்த கௌஷல் காந்த் மிஸ்ரா மனு தாக்கல் செய்திருந்தாா்.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் பொதுமக்கள் அலைந்து திரியும் சூழலில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு ஆதரவாக விதிகளை உருவாக்குவது தன்னிச்சையாகவும் கற்பனை செய்ய முடியாததாகவும் உள்ளது.
சமுதாயத்தின் முக்கியமான சுகாதார வளங்களை பொது மக்களிடமிருந்து திருப்பிவிடப்படுவது சுகாதார உரிமைக்கு எதிரானதாகும். அரசு ஊழியா்களுக்கு ஏற்கனவே சலுகைகள் அளிக்கப்பட்டு இருக்கிறது . ஆகவே தில்லி அரசு பிறப்பித்த ஏப்ரல் 27-ஆம் தேதி அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் இதுபோன்ற அதிகாரிகள் மற்றும் அவா்களின் குடும்பத்திற்காக பிரத்யேகமாக இரண்டு மருத்துவமனைகள், ஒரு பரிசோதனை ஆய்வகம் ஒதுக்கீடு செய்வது செய்வதற்காக கடந்த ஆண்டு தில்லி அரசு பிறப்பித்த 3 உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.