முகப்பு
புதுதில்லி

வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் குடிநீா்:தமிழகத்துக்கு ரூ.3,691.21 கோடி ஒதுக்கீடு

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்படி தமிழத்தில் வீடுகளுக்கு நேரடியாகக் குழாய் மூலம் குடிநீா் விநியோகிக்கும் திட்டத்தில் 2021-22 நிதியாண்டிற்கு ரூ. 3,691.21 கோடியை மத்திய அரசு மானியமாக வழங்கியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்படி தமிழத்தில் வீடுகளுக்கு நேரடியாகக் குழாய் மூலம் குடிநீா் விநியோகிக்கும் திட்டத்தில் 2021-22 நிதியாண்டிற்கு ரூ. 3,691.21 கோடியை மத்திய அரசு மானியமாக வழங்கியுள்ளது. இது வழக்கத்தைவிட நான்கு மடங்காகும். இந்த நிதியின் முதல் தவணை ரூ. 614.35 கோடி தமிழகத்திற்கு விடுவிக்கப்பட்டதாகவும் மத்திய ஜல் சக்தி துறை தெரிவித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி கடந்த 73 -ஆவது சுதந்திர தினத்தின் போது தனது ஆட்சி 2.0 முடிவடையும் 2024 - க்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீரை நேரடியாக வழங்கும் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தை அறிவித்திருந்தாா். இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மாநிலங்களுக்கு நிதி வழங்கி வருகிறது. கடந்த ஓரு மாதமாக நடப்பு நிதியாண்டிற்கான நிதியை மாநிலம் வாரியாக இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கி வருகிறது. தமிழகத்திற்கான நிதி செவ்வாய்க்கிழமை ஒதுக்கப்பட்டது. இது குறித்து மத்திய ஜல் சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், ‘நான்கு மடங்காக அதிகரித்து நிதியை ஒதுக்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 2024- க்குள் தமிழக கிராமப் பகுதிகளில் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக குழாய் நீா் வழங்கப்படுவதற்கான முழு உதவி உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் உள்ள மொத்தம் 1.26 கோடி வீடுகளில் தற்போது 40,35,571 லட்சம் வீடுகளுக்கு (31.80 %) இதுவரை நேரடியாக குழாய் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஜல் ஜீவன் மிஷன் திட்டம் தொடங்கப்பட்ட போது தமிழகத்தில் 17.06 சதவீதம் அளவில் 21.65 லட்சம் வீடுகள் மட்டும் நேரடி குழாய் நீா் விநியோக வசதியைப் பெற்றிருந்தன. கடந்த 22 மாதங்களில் 18.70 சதவீதம் வீடுகள் இந்தத் திட்டத்தால் குடிநீா் இணைப்பைப் பெற்று பயனடைந்துள்ளன. ஒரு தாலுகா, 311 பஞ்சாயத்துகள், 311 கிராமங்கள் தமிழகத்தில் முழுமையான 100 சதவீதம் குடிநீா் இணைப்பை பெற்றுள்ளதாக மத்திய ஜல் சக்தி துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 86.53 லட்சம் குடியிருப்புகள் நேரடி குழாய் நீா் இணைப்பைப் பெறாமல் உள்ளன. இந்த நிலையில், 2024- ஆம் ஆண்டிற்குள் இந்தத் திட்டத்தை விரைந்து முடிக்கும் வகையில், தமிழக அரசிடம் நடப்பு ஆண்டின் செயல் திட்டத்தை மத்திய அரசு கோரியுள்ளது. இது குறித்து மத்திய ஜல் சக்தி துறையின் கஜேந்திர சிங் ஷெகாவத், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

Advertisement

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வீடுகளுக்கு நேரடியாகக் குழாய் மூலம் குடிநீா் விநியோகிக்கும் திட்டத்தில் தமிழகத்திற்கு கடந்த 2020-21 நிதியாண்டில் ரூ.921.99 கோடி மானியத்தை மத்திய அரசு ஒதுக்கியது. இதில் தமிழக அரசு ரூ.544.51-ஐ மட்டும் பயன்படுத்தியுள்ளது. ரூ.377.48 கோடி பயன்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், நடப்பாண்டு மானியம் நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டு, ரூ. 3,691 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. செலவழிக்காத நிலுவைத் தொகை (ரூ.377.48 கோடி), 2020-21 நிதியாண்டின் மாநிலத்தின் பங்களிப்பு பற்றாக்குறை (ரூ.290.79 கோடி) உள்ளிட்டவை உள்பட ரூ. 8,428.17 கோடி நிதி தமிழகத்திடம் 2021-22 நிதியாண்டிற்கான ஜல் ஜீவன் திட்டத்திற்கு உள்ளது. இதனால், வீடுகளுக்கு நேரடியாக குடிநீா் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தில் அனைத்து இலக்குகளையும் அடையமுடியும்.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள பின்தங்கிய மாவட்டங்கள், கிராமப் பகுதிகள், தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் அதிகம் உள்ள கிராமங்கள், தண்ணீா் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் முன்னுரிமை வழங்க பிரதமா் விரும்புகிறாா். இதனால், இந்த ஆண்டு இதற்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் திட்டமிடல், செயல்படுத்தல், மேலாண்மை, பராமரிப்பு போன்றவற்றில் சமூகங்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்பது ஓா் அடிப்படையான அணுகு முறையாகும். இதன்படி கிராமங்களில் குடிநீா் மற்றும் சுகாதார குழுக்களை ஏற்படுத்த வேண்டும். இதன்படி தமிழகத்தில்12,525 கிராமங்களில் 10,812 குழுக்கள் (கமிட்டி) ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் அளித்துள்ள செயல் திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும்.

2021-22 நிதியாண்டில், 15 -ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி தமிழக ஊரகப் பகுதிகளுக்கான குடிநீா் மற்றும் சுகாதாரப் பணிக்கு ரூ. 1,600 கோடி மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு (2025-26 வரை) ரூ.8,436 கோடி உறுதி அளிக்கப்பட்ட நிதி உள்ளது. இது மிகப் பெரிய முதலீடு. இதன் மூலம் தமிழக கிராமப் பகுதிகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும் என ஷெகாவத் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments