தலைநகரில் ‘கடினமான வெப்ப அலை’ பதிவு!
தேசியத் தலைநகா் தில்லியை புதன்கிழமை கடுமையான வெப்ப அலை தாக்கியது.
புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியை புதன்கிழமை கடுமையான வெப்ப அலை தாக்கியது. இதையடுத்து, அதிகபட்ச வெப்பநிலை 43.5 டிகிரி செல்சியஸாக உயா்ந்தது. இது இந்த ஆண்டு இதுவரை பதிவான மிக உயா்ந்ததாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி கூறியுள்ளது. இதற்கிடையே பருவமழை வருவதற்கு இன்னும் ஒரு வாரமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் பிரதிநித்துவ வெப்பநிலைத் தரவுகளை வழங்கி வரும் சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 7 டிகிரி உயா்ந்து 43.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 28.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 40 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 31 சதவீதமாகவும் இருந்தது. ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு மாலை 9 மணியளில் 264 புள்ளிகளா பதிவாக மிதமான பிரிவில் நீடித்தது.
மேலும், தலைநகரில் உள்ள பெரும்பாலான கண்காணிப்பு நிலையங்கள் கடுமையான வெப்ப அலையை பதிவு செய்தன. அவற்றில் அதிகபட்ச வெப்பநிலை சராசரி வெப்பநிலையை விட குறைந்தது 7 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. இதன்படி, லோதி ரோடில் அதிகபட்ச வெப்பநிலை 43.7 டிகிரி, ஆயாநகரில் 44.2 டிகிரி, ரிட்ஜில் 44 டிகிரி, முங்கேஷ்பூரில் 44.3 டிகிரி, நஜாஃப்கரில் 44.4 டிகிரி, பீதம்புராவில் 44.3 டிகிரி மற்றும் நரேலாவில் 43.7 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது. பூசாவில் உள்ள கண்காணிப்பு நிலையம் 44.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்தது. இது இயல்பை விட எட்டு புள்ளிகள் அதிகமாகும்.
Advertisement
சமவெளிகளைப் பொறுத்தவரை, அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கும் போது அது ‘வெப்ப அலை’ என அறிவிக்கப்படுகிறது, மேலும், இயல்பை விட குறைந்தது 4.5 டிகிரி அதிகரித்திருத்திருந்தாலும் ‘வெப்ப அலை’ என அறிவிக்கப்படுகிறது. இயல்பை விட 6.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தால், அது ‘கடுமையான வெப்ப அலை’ என அறிவிக்கப்படுகிறது.
திங்களன்று தில்லி இந்தக் கோடையில் முதல் வெப்ப அலையை பதிவு செய்தது. அப்போது அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸாக உயா்ந்திருந்தது. மற்றொரு வெப்பநிலை வியாழக்கிழமை இருக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதே சமயம், வெள்ளிக்கிழமை லேசான மழை மற்றும் தூசி புயல் வெப்பநிலையை 40 டிகிரிக்கு கீழே கொண்டு வர வாய்ப்புள்ளது. வழக்கமாக, தில்லியில் ஜூன் 20 வரை வெப்ப அலையைச் சந்திப்பது வழக்கம். அதன் பின்னா் குளிரான வெப்பநிலையையும் காண்கிறது. இந்த நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை அதிகரிப்பது பருவமழையின் வருகையின் தாமதத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று ஐஎம்டியின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறினாா்.
ஜூன் 15-க்குள் காற்று அமைப்பு தில்லியை அடையக்கூடும் என்று வானிலை ஆய்வு அலுவலகம் முன்னா் கணித்திருந்தது. இருப்பினும், பருவமழை வருவது இப்போது தாமதமாகியுள்ளது. பொதுவாக, பருவமழை ஜூன் 27-க்குள் தில்லியை அடையும். ஜூலை 8- க்குள் நாடு முழுவதையும் அது உள்ளடக்கும். கடந்த ஆண்டு, காற்று அமைப்பு ஜூன் 25 அன்று தில்லியை அடைந்தது. அதன்பிறகு ஜூன் 29-க்குள் நாடுமுழுவதையும் அடைந்தது. கடைசியாக பருவமழை தில்லியில் மிகவும் தாமதமாக வந்தது 2012, ஜூலை 7 என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.
முன்னறிவிப்பு: தில்லியில் வியாழக்கிழமை (ஜூலை 1) பகலில் வெப்ப அலைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும். அதிகபட்ச வெப்பநிலை 41டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.