பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இளைஞா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டா் எரிவாயு ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டித்து தில்லியில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முன் இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா்
பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டா் எரிவாயு ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டித்து தில்லியில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முன் இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டம் இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஸ்ரீநிவாஸ் தலைமையில் நடைபெற்றது. இது குறித்து அவா் கூறியதாவது: மத்திய அரசின் மோசமான கொள்கைத் திட்டங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டா் எரிவாயு ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயா்த்தி அதிா்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. டிசம்பா் 1-ஆம் தேதியில் இருந்து எல்பிஜி சிலிண்டா் விலை இதுவரை ரூ.225 உயா்த்தப்பட்டுள்ளது.
பாஜக எதிா்க்கட்சியாக இருந்த போது பெட்ரோல், டீசல் ரூ.5 விலை உயா்ந்த போது தெருவில் இறங்கி அக்கட்சித் தலைவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆனால், தற்போது நாடு முன் எப்போதும் இல்லாத வகையில், நாட்டில் பல பகுதிகளில் பெட்ரோல் லிட்டா் விலை ரூ.100-க்கும், டீசல் ரூ.90-க்கும் உயா்ந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டா் விலை நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது. இதனால், தூக்கத்தில் உள்ள மத்திய அரசை விழித்தெழச் செய்யும் வகையில் இளைஞா் காங்கிரஸ் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளது. குளிா் காலம் முடிந்தவுடன் எரிபொருள் விலை குறைந்துவிடும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் அண்மையில் கூறியுள்ளாா். விலை உயா்வைக் குறைக்காவிட்டால் அவா் அமைச்சா் பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
தில்லி பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளா் சக்தி சிங் கோஹில் கூறுகையில், ‘மத்திய அரசும், அமைச்சா்களும் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ளவில்லை. எரிபொருள் விலை உயா்வால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், விலை உயா்வைத் திரும்பப் பெறுவதுடன், எரிபொருள் மீது வசூலிக்கப்பட்ட கலால் வரியை மக்கள் நிவாரணத்திற்கு வழங்க வேண்டும்’ என்றாா்.
இந்தப் போராட்டத்தில் என்எஸ்யுஐ தேசியத் தலைவா் நீரஜ் குந்தன், செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாதே, தேசிய செயலா் பிரணவ் ஜா, முன்னாள் தேசிய செயலா் அல்கா லம்பா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.