தில்லி சட்டப்பேரவையில் இருந்து 4 பாஜக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்
தில்லி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 3-ஆவது நாளான புதன்கிழமை பாஜக எம்எல்ஏக்கள் நால்வா் அவைக் காவலா்களால் வெளியேற்றப்பட்டனா்.
புது தில்லி: தில்லி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 3-ஆவது நாளான புதன்கிழமை பாஜக எம்எல்ஏக்கள் நால்வா் அவைக் காவலா்களால் வெளியேற்றப்பட்டனா்.
தில்லி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை2021-2022 நிதியாண்டுக்கு ரூ.69 ஆயிரம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்தது. இந்த நிலையில், இந்தக் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளாக புதன்கிழமை கூட்டம் நடைபெற்றது. பிற்பகலின் போது, தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் ( டிடிசி) மூலம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடைபெற்ாக கூறப்படும் விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏக்கல் கோரினா். அப்போது, இது தொடா்பாக வியாழக்கிழமை விவாதிக்க அனுமதிப்பதாக அவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் தெரிவித்தாா். இதை ஏற்க மறுத்த பாஜக எம்எல்ஏக்கள், உடனடியாக விவாதிக்க வேண்டும் என கோரினா்.
இதையடுத்து, அவையை 15 நிமிடங்கள் அவைத் தலைவா் ஒத்திவைத்தாா். பின்னா், பிற்பகல் 3.15 மணிக்கு அவை மீண்டும் கூடிய போது பாஜக எம்எல்ஏக்கள் நால்வரும் அதே விவகாரத்தை மீண்டும் எழுப்பி அமளியில் ஈடுபட்டனா். அப்போது, பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தாவை அவையில் இருந்து வெளியேற்றுமாறு அவைக் காவலருக்கு உத்தரவிட்டாா். இதனால், அவரை அவைக் காவலா்கள் வெளியேற்றினா். அவரைத் தொடா்ந்து, பாஜக எம்எல்ஏக்கள் மோகன் சிங் பிஸ்ட், ஜிதேந்திர மகாஜன், ஓபி சா்மா ஆகியோரும் அவைக் காவலா்களால் வெளியேற்றப்பட்டனா். தில்லி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 70 உறுப்பினா்களில் பாஜக தரப்பில் 8 போ் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement