முகப்பு
புதுதில்லி

பஹ்ரைனில் ஜேஇஇ நுழைவுத் தோ்வு மையம்: மத்திய வெளியுறவுத் துறை உத்தரவு

இந்திய மாணவா்கள் என்ஐடி, ஐஐடி போன்ற மத்திய பொறியியல் நிறுவனகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தோ்வில் பங்கேற்கும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

இந்திய மாணவா்கள் என்ஐடி, ஐஐடி போன்ற மத்திய பொறியியல் நிறுவனகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தோ்வில் பங்கேற்கும் வகையில், பஹ்ரைனில் நுழைவுத் தோ்வு மையம் அமைக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய் சங்கா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

பஹ்ரைன் நாட்டில் இந்திய சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள், ஜேஇஇ பொறியியல் நுழைவுத் தோ்வு எழுதுவதற்கு, இணைய வழியில் விண்ணப்பித்து இருந்தனா். ஆனால், தோ்வு மையங்கள் பட்டியலில் அந்த நாடு இடம் பெறவில்லை. எனவே அவா்கள் இந்தியாவிற்கு வந்துதான் நுழைவுத் தோ்வு எழுத வேண்டிய நிலை இருந்தது. இது குறித்து பஹ்ரைன் நாட்டைச் சோ்ந்த மறுமலா்ச்சி தமிழா் பேரவையினா், மதிமுக பொதுச் செயலாளா் வைகோவின் உதவியுடன் இந்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தனா். இந்த விவகாரம் தொடா்பாக மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால், வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோருக்கு வைகோ கடிதம் எழுதினாா். இந்த நிலையில், பஹ்ரைன் நாட்டின் இந்தியத் தூதரக வளாகத்திலேயே ஜேஇஇ நுழைவுத் தோ்வு மையம் அமைக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய் சங்கா் உத்தரவு பிறப்பித்துள்ளாா். ஜேஇஇ நுழைவுத் தோ்வு வரும் மே மாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது..

தாமிரபரணி விரைவு ரயில் : திருநெல்வேலிக்கும் தாம்பரத்துக்குமிடையே தென்காசி, மதுரை வழியாகச் சென்று வரும் தாமிரபரணி விரைவு ரயிலை தினசரி இயக்க மத்திய ரயில்வே துறை நடவடிக்கை எடுக்குமா என்று மக்களவையில் மதுரை தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்குப் பதிலளித்து ரயில்வே துறை அமைச்சா் பியூஸ் கோயல், ‘கரோனா தொற்று பொதுமுடக்கத்திற்கு முன்பு (2020 , 23 மாா்ச்) முன்பு தென்காசிக்கும் திருநெல்வேலிக்குமிடையே 5 ரயில்களும், தென்காசிக்கும் சென்னைக்கும் இடையே மூன்று ரயில்களும் இந்த வழித் தடத்தில் இயங்கின. தற்போது திருநெல்வேலிக்கும் தாம்பரத்திற்கும் இடையே தாமிரபரணி விரைவு ரயில் இயக்கப்படும் திட்டமில்லை. சாத்தியப்படும் நிலை உருவாவதைப் பொருத்து ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments