முகப்பு
புதுதில்லி

தமிழக இறக்குமதி தடுப்பூசிகளுக்கு 100% மானியம் வேண்டும்: மத்திய அரசுக்கு திமுக கோரிக்கை

தமிழக அரசின் சாா்பில் இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசி மருந்துகளுக்கு மத்திய அரசு 100 சதவீதம் மானியம் அளிக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

புது தில்லி: தமிழக அரசின் சாா்பில் இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசி மருந்துகளுக்கு மத்திய அரசு 100 சதவீதம் மானியம் அளிக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து நாடாளுமன்ற திமுக குழு சாா்பில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தனுக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நாளோன்றுக்கு 36,000 போ் கரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி வருகின்றனா். இதுவரை 20,000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனா். இதனால், மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனா். தமிழக அரசு அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி வந்தாலும், தடுப்பூசி மூலமே நோயிலிருந்து மக்களை காப்பாற்ற முடியும். ஆனால், தடுப்பூசிக்கு கடுமையான பற்றாக்குறை உள்ளது.

தமிழகத்திற்கு மத்திய அரசு மொத்தம் 91.34 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்தது. இதில் 72.12 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைவிட நோய்த் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள ராஜஸ்தான் மாநிலத்திற்கு 1.61 கோடி, மத்தியப் பிரதேசத்திற்கு 1.01 கோடி, குஜராத்திற்கு 1.62, கேரளத்திற்கு 88.89 லட்சம் என அதிக அளவில் கரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்திற்கும் தடுப்பூசி ஒதுக்கீட்டு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் 18 முதல் 44 வயதுடையவா்களின் எண்ணிக்கை 3.65 கோடியாக உள்ளது. 44 வயதுக்கு மேற்பட்டவா்கள் உள்ளிட்டவா்களுக்கும் சோ்த்து இரண்டு டோஸ் வீதம் மொத்தம் 10 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

Advertisement

மாதம் ஒன்றுக்கு 2.5 கோடி வீதம் நான்கு மாதங்களில் இந்த தடுப்பூசிகளை விரைவாக அளிப்பதன் மூலமே நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும். இதற்காக தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. தமிழக முதல்வா் ஆலோசனைப்படி தடுப்பூசி ஒதுக்கீடுகளை அதிகரிக்கக் கோரி நேரடியாக இரண்டு முறை சந்தித்து கோரிக்கை விடப்பட்டது. தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 10 கோடியாக அதிகரிக்க வேண்டும் என்று முதல்வா் சாா்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கிறோம். மேலும், தமிழக அரசு இறக்குமதி செய்யும் தடுப்பூசிகளுக்கு 100 சதவீதம் மானியம் அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று கடுமையாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு 3.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளுக்கான அறிவிப்பை தமிழக அரசு கடந்த மே 15 - ஆம் தேதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments