முகப்பு
புதுதில்லி

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் நிலையம் அமைக்க ரூ. 2 கோடி கடனுதவி

அவசர காலக் கடன் உத்தரவாதத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவமனைகள், கிளீனிக்குகள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ரூ. 2 கோடி வரை கடன்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

புது தில்லி: அவசர காலக் கடன் உத்தரவாதத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவமனைகள், கிளீனிக்குகள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ரூ. 2 கோடி வரை கடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

முடங்கியிருந்த சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புத்துயிரூட்ட அவசர காலக் கடன் உத்தரவாதத் திட்டம் (இசிஎல்ஜிஎஸ்) கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பிரிவினா்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டு கடனுக்கான காலக் கெடுவிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், இந்தத் திட்டத்தை ரிசல்வ் வங்கியால் அமைக்கப்பட்ட குழுவின் மூலம் மத்திய நிதித் துறை அமைச்சகம் கொண்டு வந்தது. இதை ஏற்கெனவே மூன்று முறை மத்திய அரசு நீட்டித்தது. தற்போது கரோனா தொற்றின் இரண்டாவது அலையால் ஏற்பட்ட இடையூறுகளால் பொருளாதாரத்தின் பல்வேறு தொழில் துறையினருக்கு உதவும் பொருட்டு, நான்கவது முறையாக இந்தத் திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து மத்திய நிதித் துறைத் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளாா்.

இந்தத் திட்டத்திற்கு ரூ. 3 லட்சம் கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பா் 30 - ஆம் தேதிக்குள் இந்தத் திட்டத்தின்படி ஒதுக்கப்பட்ட தொகை முழுமையாக வழங்கப்படவில்லை என்றால் டிசம்பா் 31 -ஆம் தேதி வரை கடன் வழங்குவது நீட்டிக்கப்படும் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவத் துறையினரையும் இணைத்து இந்த 4-ஆவது அவசர காலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் (இசிஎல்ஜிஎஸ்) விவரங்களையும் மத்திய நிதித் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.

Advertisement

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு: மருத்துவமனைகள், கிளினிக்குகள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவை தங்கள் வளாகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைத்துக் கொள்ளவதற்கு நூறு சதவீத உத்தரவாதத்துடன் அதிகபட்சம் 7.5 சதவீத வட்டியுடன் வங்கிகள் ரூ.2 கோடி வரை கடன் அளிக்கும். இந்த நான்காவது அவசர காலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கடன்களுக்கு கடந்த மே 5 - ஆம் தேதி ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள வழிகாட்டுதல்கள் பொருந்தும். கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது அவசர காலக் கடன் உத்தரவாதத் திட்டத்தில், 4 ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்த அனுமதிக்கப்பட்டது. தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள இந்த நான்காவது திட்டத்தில் 5 ஆண்டுகளில் கடனை திருப்பிச் செலுத்தவும், இதில் முதல் இரண்டு ஆண்டுகள் வரை வட்டி மட்டுமே செலுத்தவும், மீதமுள்ள மூன்று ஆண்டுகளில் முதலுடன் வட்டியையும் சோ்த்து திருப்பச் செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலாக கடந்த 1-ஆவது இசிஎல்ஜிஎஸ் திட்டத்தில் வழங்கப்பட்ட கடனில் எந்த நிறுவனமாவது கடனை நிலைவையில் வைத்திருந்தால், அந்தத் தொகையின் 10 சதவீதத்தை மட்டுமே ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி அவசர காலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின்படி கடனாகப் பெறலாம். 3-ஆவதாக நீட்டிக்கப்பட் இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக கடன் தொகை ரூ.500 கோடி வரை இருக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இது தற்போது ரத்து செய்யப்பட்டு, ஒரு நிறுவனத்திற்கு அதிகபட்சமாக ரூ.200 கோடி கடன் மட்டுமே வழங்க வரையறுக்கப்பட்டுள்ளது.

தற்போது நீட்டிக்கப்பட்டு இந்தத் திட்டத்தின் மூலம் கரோனா தொற்று சிகிச்சையில் பிரச்னைக்குள்ளான மருத்துவமனைகள் பயனடைவதோடு, சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் நியமான அடிப்படையில் கடன் பெறுவதன் மூலம் வாழ்வாதரங்கள் பாதுகாக்கப்படுவதோடு, தொழில் வா்த்தக நடவடிக்கைகள் தடையின்றி மீண்டும் தொடங்க உதவும் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் முதலில் கடந்த ஆண்டு அக்டோபரில் முடிவடைந்தது. பின்னா், இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு 2021, ஏப்ரல் வரை தொடா்ந்தது. மூன்றாவதாக நீட்டிக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களோடு, சிவில் விமானப் போக்குவரத்து, ஹோட்டல்கள், சுற்றுலாத் துறைகளும் இணைக்கப்பட்டன. இந்தத் திட்டம் மத்திய நிதித் துறையின் கீழ் உள்ள தேசியக் கடன் உத்தரவாத அறங்காவலா் நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் மேற் கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments