முகப்பு
புதுதில்லி

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 14.5 டிகிரி!

தேசியத் தலைநகா் தில்லியில் குளிரின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:30 AM
பகிர்:

தேசியத் தலைநகா் தில்லியில் குளிரின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையிலும், இரவிலும் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதற்கிடையே, இந்தப் பருவத்தில் காற்றின் தரம் முதல்முறையாக ‘ரெட் ஸோன்’ பிரிவில் காணப்பட்டது. அதாவது ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை மாற்றம் ஏதுமின்றி 14.5 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.

தில்லியில் குளிா்காலத்தின் தாக்கம் தொடங்கியுள்ளது. சில தினங்களாகவே காலையிலும் இரவிலும் குளிரின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றம் ஏதுமின்றி 14.5 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 29.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணி அளவில் 87 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 60 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது. அதிகாலையில் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகலில் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. மாலையில் மிதமான குளிரின் தாக்கம் உணரப்பட்டது.

காற்றின் தரம்: தில்லியில் காற்றின் தரத்தில் பின்னடைவு நீடித்தது. இது குறித்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினா் தெரிவிக்கையில், ‘தில்லியில் செவ்வாய்க்கிழமை 24 மணிநேர சராசரியின்படி காற்றின் தரக் குறியீடு 303 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. திங்கள்கிழமை இது 281, ஞாயிற்றுக்கிழமை 289, சனிக்கிழமை 268 புள்ளிகளாகப் பதிவாகி இருந்தது. தில்லியின் அருகில் உள்ள ஃபரீதாபாத் (306), காஜியாபாத் (334), நொய்டா (303) ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் காணப்பட்டது.

Advertisement

மத்திய அரசின் காற்றின் தர முன்னறிவிப்பு நிறுவனமான ‘சஃபா்’ நிறுவனத் திட்ட இயக்குநா் குஃப்ரான் பெய்க் கூறுகையில், ‘தில்லியில் பி.எம். 2.5 மாசுவுக்கு பயிா்க் கழிவுகள் எரிப்பு 6 சதவீதம் பங்களிப்பு அளிக்கிறது. குறைந்த வெப்பநிலை காரணமாக உள்ளூா் ஆதாரங்களில் இருந்து மாசு சோ்ந்ததன் விளைவாக ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம் இருந்தது. அக்டோபரில் ஒரு நாள்கூட காற்றின் தரம் மிகவும் மோசம் அல்லது கடுமைப் பிரிவில் பதிவாகவில்லை என்றாா் அவா்.

முன்னறிவிப்பு: தில்லியில் புதன்கிழமை (நவம்பா் 3) வானம் தெளிவாகக் காணப்படும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 14டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments