கேமரூன் கிரீன் பந்துவீசவில்லையென்றால் கேகேஆர் என்ன செய்ய வேண்டும்?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேமரூன் கிரீன் பந்துவீசவில்லையென்றால் அணி நிர்வாகம் என்ன செய்யலாம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பேசியுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேமரூன் கிரீன் பந்துவீசப் போவதில்லையென்றால், அந்த அணியில் கூடுதல் பேட்டரை களமிறக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் கடந்த மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை.
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தோல்வியைத் தழுவியது. சன்ரைசர்ஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோல்வியைத் தழுவியது. இந்த இரண்டு போட்டிகளிலுமே ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் பந்துவீசவில்லை.
Advertisement
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் பந்துவீசப் போவதில்லையென்றால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கூடுதல் பேட்டரை முயற்சிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நடப்பு ஐபிஎல் தொடரில் இனிவரும் போட்டிகளில் கேமரூன் கிரீன் பந்துவீசப் போவதில்லையென்றால், அணி நிர்வாகம் கூடுதல் பேட்டரை பிளேயிங் லெவனில் களமிறக்கலாம். கேமரூன் கிரீன் ஐபிஎல் தொடரில் சதம் விளாசியுள்ளார். அவரால் பேட்டிங்கில் நன்றாக செயல்பட முடியும். ஆனால், அவரது சமீபத்திய ஃபார்ம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. கொல்கத்தா அணியில் நான்காவது வீரராக கேமரூன் கிரீன் இருப்பது நல்லது. ஆனால், 5-வது மற்றும் 6-வது இடத்தில் களமிறங்கும் வீரர்கள் சிறப்பாக விளையாடத் தவறுகிறார்கள் என்றார்.
கேமரூன் கிரீன் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் 18 ரன்களும், சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் 2 ரன்களும் எடுத்தார்.
கேமரூன் கிரீன் பந்துவீச்சில் ஈடுபடாதது குறித்து கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேசியதும், அதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கமளித்ததும் குறிப்பிடத்தக்கது.