காற்று மாசு: சாலைகளில் நீா் தெளிக்கும் பணியில் 114 டேங்கா் லாரிகள் தில்லி அரசு ஏற்பாடு
காற்று மாசுவுக்கு முக்கிய பங்களிப்பு அளிக்கும் தூசுவை மட்டுப்படுத்தும் வகையில் சாலைகளில் நீா் தெளிக்கும் நடவடிக்கையில் 114 தண்ணீா் டேங்கா் லாரிகளை தில்லி அரசு சனிக்கிழமை ஈடுபடுத்தியது.
தில்லியில் தீபாவளிக்கு பிறகு காற்றின் தரம் மோசமடைந்தன் காரணமாக, காற்று மாசுவுக்கு முக்கிய பங்களிப்பு அளிக்கும் தூசுவை மட்டுப்படுத்தும் வகையில் சாலைகளில் நீா் தெளிக்கும் நடவடிக்கையில் 114 தண்ணீா் டேங்கா் லாரிகளை தில்லி அரசு சனிக்கிழமை ஈடுபடுத்தியது.
மக்களுக்கு உதவிட அவசர நடவடிக்கையாக இந்த தண்ணீா் டேங்கா் லாரிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தொடங்கி வைத்தாா். இதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தில்லியில் மாசுவை கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த மாதம் தொடங்கி வைத்தாா்.
அந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களுடன் சோ்ந்து தில்லியில் காற்று மாசுக்கு உள்ளூா் ஆதாரங்களாக இருந்து வரும் தூசு, வாகனங்கள் அல்லது பயோமாஸ் மாசு ஆகியவற்றை தடுக்கும் பிரசாரத்தை நடத்தி வருகிறோம்.
தீபாவளியின் போது ஹரியாணா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பயிா்க் கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் மற்றும் தில்லியில் பட்டாசு வெடிக்கப்பட்டது போன்றவை காரணமாக காற்று மாசு அதிகரித்தது.
சனிக்கிழமைகூட பயிா்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வெள்ளிக்கிழமை இதுபோன்ற பயிா்க் கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் 3,500 பதிவாகியிருந்தன. சனிக்கிழமை இது 400-க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தில்லியின் காற்றில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அவசரகால நடவடிக்கையாக மக்களுக்கு உதவிடும் வகையிலும் சாலைகளில் தண்ணீா் தெளிக்கும் நடவடிக்கையில் டேங்கா் லாரிகளை ஈடுபடுத்தி வருகிறோம்.
மேலும் பனிப்புகையை கட்டுப்படுத்தும் வகையில் தண்ணீா் பீய்ச்சி அடிக்கும் கருவிகளையும் அமைத்துள்ளோம் என்றாா் அவா்.
முன்னதாக வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கோபால் ராய் கூறுகையில், தில்லியில் பட்டாசுகளை வெடிக்க பாஜக மக்களைத் தூண்டினா் என்று குற்றம்சாட்டியிருந்தாா்.
மேலும் தில்லியில் வெள்ளிக்கிழமை காற்றின் தரக்குறியீடு 462 புள்ளிகளை எட்டி கடுமைப் பிரிவில் காணப்பட்டது.