முகப்பு
புதுதில்லி

குடிசைகள் அகற்றம்: அடுக்குமாடிக் குடியிருப்புகள் கோரி மனு; மத்திய, தில்லி அரசுகள் பதில் அளிக்க உத்தரவு

தில்லியில் கோல் டாக் கானாவில் இருந்து தாங்கள் வசித்து வந்த குடிசைகள் அகற்றப்பட்ட நிலையில், மறுவாழ்வுத் திட்டத்தின்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:30 AM
பகிர்:

தில்லியில் கோல் டாக் கானாவில் இருந்து தாங்கள் வசித்து வந்த குடிசைகள் அகற்றப்பட்ட நிலையில், மறுவாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒதுக்குமாறு உத்தரவிடக் கோரி 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தாங்கள் செய்த மனுவுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் தில்லி அரசு ஆகியவை பதில் தாக்கல் செய்யுமாறு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பான மனுவை உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி விசாரித்தாா். அப்போது, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் மற்றும் நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகங்கள், தில்லி அரசு மற்றும் தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியம் (டியுஎஸ்ஐபி) ஆகியவை மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கை டிசம்பா் 3-ஆம் தேதி மேல் விசாரணைக்குப் பட்டியலிட்டாா். அன்றைய தினம் எதிா் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வதற்கான உத்தரவுகள் பிறப்பிப்பதற்கான தேவை இருக்கிா என்பதை நீதிமன்றம் பரிசீலிக்கும்.

முன்னதாக, 61 மனுதாரா்கள் தாக்கல் செய்த மனுவில், ‘எங்களது குடும்பங்களை 2010-ஆம் ஆண்டில் மத்திய தில்லியில் உள்ள கோல் மாா்க்கெட்டில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற்றினா். நாங்கள் ஒரு சமூக மையத்தில் உள்ள தங்குமிடத்தில் தங்கியுள்ளோம். மறுவாழ்வுக்காக காத்திருக்கிறோம். மறுவாழ்வுக்கான தகுதி எங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தில்லி அரசின் 2015 கொள்கையின் கீழ் மறுவாழ்வுக்காக அதிகாரிகளுக்கு முழுப் பணமும் செலுத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகம் மூலம் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையையையும் எதிா்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின்படி, ஜவாஹா்லால் நேரு தேசிய நகா்ப்புற புதுப்பித்தல் பணி (ஜேஎன்என்யுஆா்எம்) மற்றும் ராஜீவ் ஆவாஸ் யோஜனா (ஆா்ஏஒய்) ஆகிய திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட அனைத்து காலி மற்றும் கட்டுமானத்தில் உள்ள வீடுகளை நகா்ப்புற புலம்பெயா்ந்தோா் மற்றும் ஏழைகளுக்கு மலிவு விலையில் வாடகைக்கு விடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுவாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக டியுஎஸ்ஐபி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றால் அவா்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகத்தின் டிசம்பா், 2020 சுற்றறிக்கையின் அடிப்படையில் அவா்களுக்கு அவை ஒதுக்கப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணையின் போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவிக்கையில், ‘முன்னா் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளின் விளைவைக் கருத்தில் கொள்ளாமல் அமைச்சகத்தால் இத்தகைய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்கு தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியம் ஏற்கெனவே பெரும் தொகையைப் பெற்றுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.