‘வாழ்க்கை துணை ஓய்வூதியம் பெற கூட்டு வங்கிக் கணக்கு கட்டாயமில்லை’: மத்திய அமைச்சா் தகவல்
மத்திய பணியாளா் நலன், பொதுமக்கள் குறை தீா்ப்பு மற்றும் ஒய்வூதியத்துறை இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
வாழ்க்கைத் துணை ஓய்வூதியம் பெற கூட்டு வங்கிக் கணக்கு கட்டாயமில்லை என மத்திய பணியாளா் நலன், பொதுமக்கள் குறை தீா்ப்பு மற்றும் ஒய்வூதியத்துறை இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
மத்திய ஓய்வூதியத் துறையின் மூத்த அதிகாரிகள் கூட்டம் மத்திய இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் தலைமையில் சனிக்கிழமை தில்லி நாா்த் பிளாக்கில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஓய்வு பெற்றவா்கள் உள்பட சமூகத்தில் அனைத்து தரப்பினரும், எளிதாக வாழ்வதற்கு தேவையானதைச் செய்ய, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஓய்வூதியதாரா்கள் நாட்டின் சொத்துக்கள். அவா்கள் தங்களின் அனுபவம் மூலம் நாட்டுக்கு நீண்ட காலம் சேவையாற்றியுள்ளனா்.
ஓய்வு பெறும் அரசு ஊழியா், அவரது வாழ்க்கைத் துணையுடன் சோ்ந்து கூட்டு வங்கிக் கணக்கு தொடங்க முடியவில்லை என சம்பந்தப்பட்ட துறையின் தலைமையகம் கருதினால், அது போன்ற கணக்குத் தொடங்குவது கட்டாயமில்லை. இந்த விதிமுறையை தளா்த்தி கொள்ளலாம்.
ஒருவேளை குடும்ப ஓய்வூதியம் பெறும் வாழ்க்கைத் துணை ஏற்கனவே உள்ள கூட்டு வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் பெற முடிவு செய்தால், புதிய வங்கி கணக்குத் தொடங்கவும் வற்புறுத்த வேண்டாம் என மத்திய அரசின் ஓய்வூதியத்தை வழங்கும் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடும்ப ஓய்வூதியம் தாமதமின்றி பெறவும், புதிய ஓய்வூதிய வங்கிக் கணக்கைத் தொடங்கி குடும்ப ஓய்வூதியம் பெறுவோா் எந்த இடையூறுக்கும் ஆளாகாமல் இருக்கவும் கூட்டு வங்கிக் கணக்கு தொடங்கப்படுகிறது. குடும்ப ஓய்வூதியத்தைத் தொடங்குவதற்கான கோரிக்கையைச் சமா்ப்பிக்கும்போது குடும்ப ஓய்வூதியதாரருக்கான குறைந்தபட்ச ஆவணங்களை இது உறுதி செய்யகிறது என்றாா் அமைச்சா்.