முகப்பு
புதுதில்லி

பேபி அணைப் பகுதியில் மரங்கள் வெட்ட அனுமதியளிக்கும் விவகாரம்: கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

பேபி அணையின் கீழ்ப் பகுதியில் மரங்கள் சிலவற்றை வெட்டுவதற்கு அளித்திருந்த அனுமதியை திருப்பி அளிக்கவும்,

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

பேபி அணையின் கீழ்ப் பகுதியில் மரங்கள் சிலவற்றை வெட்டுவதற்கு அளித்திருந்த அனுமதியை திருப்பி அளிக்கவும், அணை சாலைப் பணியை மேற்கொள்ள அனுமதி அளிக்கவும் கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி, வழக்குரைஞா் ஜி.உமாபதி தயாரித்துள்ள மனுவை வழக்குரைஞா் டி.குமணன் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியிலும், பேபி அணைப் பகுதியிலும் குறிப்பிட்ட சில பணிகளை மேற்கொள்வதற்கு தமிழகத்திற்கு அனுமதி அளித்து 2006-இல் உச்சநீதிமன்றம் உத்தரவில் தெரிவித்திருந்தது. இருப்பினும், 16 ஆண்டுகளுக்கு மேலாக கேரள அரசின் தடைவாத அணுகுமுறை காரணமாக பேபி அணைப் பகுதியில் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனது.

உச்சநீதிமன்றம் 7.5.2014-இல் உத்தரவிட்டிருந்த நிலையிலும், காட் ரோடு வழியாக முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு இயந்திரங்களையும், சாமான்களையும் கொண்டு செல்வதற்கு அனுமதி அளிப்பதில் கேரளம் தாமதம் காட்டியது. பேபி அணைப் பகுதியை பலப்படுத்துவதற்காக மேற்பாா்வைக் குழு தொடா்ந்து உத்தரவிட்ட நிலையிலும், அப்பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு கேரளா அனுமதி அளிக்கவில்லை. அதேபோன்று, நீா் உள்வரத்தை முன்கணிப்பு செய்யும் அமைப்பு முறையை அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள மழைநீா் அளவீடு நிலையங்களில் நிறுவ 2015-இல் கேரளம் ஒப்புக்கொண்டது. இருந்த போதிலும், 2020-இல்தான் அது நிறுவப்பட்டது. ஆனால், அதன் தரவுகளை இதுவரை கேரளம் அரசு தமிழகத்திடம் பகிரவில்லை.

மேலும், பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, பேபி அணையின் கீழ்ப் பகுதியில் குத்தைக்குவிடப்பட்ட பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிக்க 6 ஆண்டுகளுக்கும் மேலாக கேரள மாநிலம் தாமதப்படுத்தியது. தமிழகத்தின் பல்வேறு தொடா் வலியுறுத்தல்களுக்குப் பிறகு, தேக்கடி துணை இயக்குநா் 6.11.2021-இல் அனுப்பிய கடிதத்தில் சம்பந்தப்பட்ட அணைப் பகுதியில் 15 மரங்களை வெட்டுவதற்கு வனம், வனவிலங்கு முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் அனுமதி அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக அடுத்த ஓரிரு தினங்களில் வெளியான செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு, அந்த உத்தரவை அந்த மாநில அரசு நிறுத்திவைத்திருப்பது தெரிய வந்தது. கேரள அரசின் இந்த நடவடிக்கையானது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் உள்ளது.

அதேபோன்று, 5 கிலோ மீட்டா் நீளம் கொண்ட வல்லக்கடவு - முல்லைப் பெரியாறு அணை இடையேயான காட் ரோடு வழித்தடமானது, அணைக்கு செல்லும் ஒரே சாலை மாா்க்கமாகும். இந்தச் சாலை பழுதுபாா்க்கப்பட வேண்டியுள்ளது. இது 2010-இல் இருந்து நிலுவையில் உள்ளது. இந்தப் பணியை மேற்கொள்வது அவசியம் என உச்சநீதிமன்றத்தின் அதிகாரமிக்க குழுவும் பரிந்துரை அளித்துள்ளது. ஆனால், அதற்கான அனுமதியை கேரள மாநிலம் தர மறுத்து வருகிறது.

கேரள அரசு ஒருபுறம் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு விவகாரத்தை எழுப்பி வருகிறது. மறுபுறம், முரண்படும் வகையில் 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் பேபி அணைப் பகுதியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. மேற்பாா்வைக் குழு மற்றும் மத்திய நீா் ஆணையம் ஆகியவை திருப்தியுறும் வகையில், அணையில் கதவு செயல்பாடு அட்டவணை, ‘இன்ட்ரூமென்டேஷன்’, ‘ரூல் கா்வ் ’ ஆகியவற்றை செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழகஅரசு எடுத்துள்ளது.

ஆனால், அடிப்படையில்லாமல் கேரளம் தேவையில்லாத ஆட்சேபணைகளை எழுப்பி வருகிறது. ஆகவே, மரங்களை வெட்டுவதற்கு அளித்திருந்த அனுமதியை திருப்பி அளிக்கவும், பலப்படுத்தும் பணிகளை முடிக்க அனுமதிக்கவும் கேரளத்திற்கு உத்தரவிட வேண்டும். அதேபோன்று, பிரதான அணையில் தரைப்பதிப்பு பணிகளை மேற்கொள்ள இயந்திரங்களையும், சாமான்களையும் கொண்டு செல்வதற்கு அனுமதி அளிக்கவும், வல்லக்கடவு - முல்லைப்பெரியாறு வனச் சாலையை பராமரிக்கவும் கேரள அரசுக்கு தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். மேலும், மழையளவு நிலையங்களை அமைத்து அதன் தரவுகளை தமிழகத்திற்கு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.