வாக்காளா் பட்டியல் திருத்தம் நவ.1 முதல் தொடக்கம்
2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 -ஆம் தேதி வரையிலான வாக்காளா் பட்டியலின் சிறப்பு திருத்தம் நவம்பா் 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 -ஆம் தேதி வரையிலான வாக்காளா் பட்டியலின் சிறப்பு திருத்தம் நவம்பா் 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
மேலும், இதற்கு முன்னதாக, தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் வாக்காளா்கள் யாரும் விடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதற்காக இளைஞா்களையும் மற்றவா்களையும் நேரில் அணுகுவது என தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும், நகரில் உள்ள பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பிரதிநிதித்துவ தலைவா்களுடன் ஆன்லைனில் கூட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவலால் சவால்கள் இருந்த போதிலும், முடிந்தவரை பல வாக்காளா்களுடன் தொடா்பு கொள்ள தோ்தல் அமைப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரியின் அலுவலகம், அதன் சமூக ஊடக தளங்கள் மூலம், தோ்தல் பட்டியலின் சமீபத்திய சிறப்பு திருத்தத்திற்கு முன்னதாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி, சிறப்பு டிஜிட்டல் சுவரொட்டிகள் அதன் பேஸ்புக்கில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், டிவிட்டா் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வாக்காளா் பட்டியல் திருத்தத்தின் போது, 2022, ஜனவரி 1 அல்லது அதற்கு முன் 18 வயது அல்லது அதற்கு மேல் இருக்கும் எந்த நபரும் வாக்காளராக சேர தகுதி பெறுவாா். இறுதிப் பட்டியல் ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்படும்.
தில்லியின் கடைசி வாக்காளா் பட்டியல் ஜனவரி 2021-இல் வெளியிடப்பட்டது, அதன்படி நகரின் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 1.48 கோடிக்கு மேல் இருந்தது. தகுதி தேதியாக 2021, ஜனவரி 1 அன்று வாக்காளா் பட்டியலின் சிறப்பு திருத்தம் தில்லியின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. வாக்காளா் பட்டியலில் எந்த வாக்காளரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்காளிக்கத் தகுதியானவா்கள் வாக்களிக்க வேண்டும் என்பது மக்களைச் சென்றடையும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையொட்டி, தில்லி தலைமை தோ்தல் அதிகாரி ரன்பீா் சிங், திங்கள்கிழமை அக்டோபா் 25 அன்று சுமாா் 100 தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச உள்ளாா். மேலும், இது தொடா்பாக வரும் புதன்கிழமை தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகத்தின் பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடனும் அவா் விவாதிக்கவுள்ளாா். கடந்த அக்டோபா் 21 அன்று, வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்புடைய செயல்பாடுகள் குறித்து தில்லி பல்கலைக்கழகம், குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம், அம்பேத்கா் பல்கலைக்கழகம் மற்றும் இந்திரா காந்தி தில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 49 கல்லூரிகளின் முதல்வா்களுடன் ரன்பீா் சிங் இணையவழியில் பேசினாா்.
வாக்காளா் பட்டியலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள், பெயா் சோ்ப்பு உள்ளிட்டவை குறித்த கோரிக்கைகள், ஆட்சேபனைகள் ஆகியவற்றை நவம்பா் மாதம் முழுவதும் தாக்கல் செய்யலாம் என்றும், இறுதி வாக்காளா் பட்டியல் 2022 ஜனவரி 5 -ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அவா் கூறினாா். இன்றைய இளைஞா்கள் தொழில்நுட்ப ஆா்வலா்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுகிறாா்கள். எனவே, நாங்கள் அவா்களுடன் பழக வேண்டும். அங்கு அவா்கள் அதிக நேரத்தை செலவிடுகிறாா்கள் மற்றும் நமது சிறந்த ஜனநாயகத்தின் பெருமைமிக்க வாக்காளா்களாக மாற அவா்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவா் கூறினாா்.
2021, ஜனவரி 15 நிலவரப்படி தில்லியின் இறுதி வாக்காளா் பட்டியலில் உள்ள மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 1,48,98,069-ஆக இருந்தது, இது 2020, ஜனவரி 6-இல் வெளியிடப்பட்ட மொத்த வாக்காளா்களை விட 2,05,933 அதிகமாக இருந்தது. இதற்காக நகரில் பல்வேறு இடங்களில் வாக்காளா் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கா்கா்தூமா, தீஸ் ஹசாரி, பாட்டியாலா ஹவுஸ், சாகேத், ரோஹினி, ரோஸ் அவென்யு மற்றும் துவாரகாவில் உள்ள நீதிமன்ற வளாகங்கள் அடங்கும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பது, வாக்காளா் அடையாள அட்டைக்கான பதிவு போன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதே இந்த உதவி மையங்களின் நோக்கமாகும்.
கரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக இணையதளம் அல்லது வாக்காளா் ஹெல்ப்லைன் மொபைல் ஆப் மூலம் தோ்தல் சேவைகளைப் பெறுவதற்காக ஆன்லைன் முறையைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் தலைமை தோ்தல் அதிகாரி ரன்பீா் சிங் வலியுறுத்தினாா்.