19 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் தொடங்க ரூ.950 கோடி மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை
தமிழகத்தில் 19 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
புது தில்லி: தமிழகத்தில் 19 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இந்த மருத்துவமனைகளுக்கு தலா ரூ. 50 கோடி வீதம் ரூ.950 கோடி நிதியை வழங்கவும் மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம் மனு அளித்தாகவும் அவா் தெரிவித்தாா்.
தில்லியில் அனைத்து மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா்களுடனான கொவைட்-19 நோய் தொற்று தடுப்பூசி, மாநில மருத்துவக் கட்டமைப்பு குறித்த ஆய்வு கூட்டத்தை புதன்கிழமை மத்திய அரசு கூட்டியிருந்தது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டாவியா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டாா். அப்போது தமிழகம் தொடா்பாந 11 கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் அவா் அளித்தாா்.
கூட்டத்திற்கு பிறகு தமிழக அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வரும் நவம்பா் இறுதிக்குள் இந்தியாவில் முழுமையாக முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடித்திட வேண்டும் என அனைத்து மாநிலங்களின் சுகாதார அமைச்சா்களுடனான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவா்களின் பட்டியல் தயாரிக்கப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய 11 கோரிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை தனியாக சந்தித்து விவாதிக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் 850 மருத்துவ மாணவா்களின் சோ்க்கைக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 800 மருத்துவ மாணவா்கள் சோ்க்கைக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.
Advertisement
தமிழகத்தில் 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மத்திய அரசிடம் தமிழகத்தில் 19 மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுமதியும், ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தலா ரூ.50 கோடி என ரூ.950 கோடி நிதி ஒதுக்குவது குறித்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கும் குறைவானவா்களுக்கு தடுப்பூசி செலுத்துவது பற்றி மருத்துவ வல்லுநா்கள் கருத்துக் கூறியுள்ளனா். இதில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு காத்திருக்கின்றோம். இரண்டாவது தவணை கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்திடுவதற்கு 12 லட்சம் போ் காத்திருக்கிறாா்கள். இதில் குறைந்தது 10 லட்சம் கோவாக்ஸின் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டுமென்றும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றாா் சுப்பிரமணியன்.
இந்தச் சந்திப்பின் போது, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் டாக்டா் ஜெ. ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநா் மரு.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநா் மரு.நாராயணபாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.