தலித் மக்கள் வாழும் பகுதிகள் புறக்கணிப்பு: பாஜக, ஆம் ஆத்மி அரசுகள் மீது காங்கிரஸ் சாடல்
தில்லியில் தலித் மக்கள் அதிகம் வாழும் கல்யாண்புரி, கோண்ட்லி, திரிலோக்புரி உள்ளிட்ட பகுதிகளை பாஜக, ஆம் ஆத்மி அரசுகள் புறக்கணித்து வருவதாக தில்லி காங்கிரஸ் சாடியுள்ளது.
தில்லியில் தலித் மக்கள் அதிகம் வாழும் கல்யாண்புரி, கோண்ட்லி, திரிலோக்புரி உள்ளிட்ட பகுதிகளை பாஜக, ஆம் ஆத்மி அரசுகள் புறக்கணித்து வருவதாக தில்லி காங்கிரஸ் சாடியுள்ளது.
கோண்ட்லி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள கல்யாண்புரி பேருந்து நிலையத்தில் தில்லி காங்கிரஸ் சாா்பில் ‘போல் கோல் யாத்திரை ’ சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் பேசியதாவது:
கோண்ட்லி சட்டப் பேரவைத் தொகுதியில் தலித் மக்கள் அதிகம் வாழும் கல்யாண்புரி, கோண்ட்லி, திரிலோக்புரி பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகளை சரிவர நிறைவேற்றாமல் தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியும், மாநகராட்சியை ஆளும் பாஜகவும் புறக்கணித்து வருகின்றன. இதனால், இந்தப் பகுதிகளில் சாலைகள் பழுதடைந்தும், குப்பைகள் குவிந்தும் கிடக்கின்றன. குடிநீா் வசதி முறைப்படி இல்லை.
இங்குள்ள பெண்கள், பெண் குழந்தைகளுக்கு சமூக விரோதிகளால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. அவா்களைத் தாக்கும் நபா்கள் பாஜக, ஆம் ஆத்மி தலைவா்களின் ஆதரவு பெற்றவா்களாக இருப்பதால் சுதந்திரமாக உலவி வருகின்றனா்.
கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில்கூட உரிய உதவிகள் அவா்களுக்கு முறைப்படி வழங்கப்படவில்லை. துப்புரவுப் பணியில் ஈடுபடும் இச்சமூகத்தைச் சோ்ந்தவா்கள் ஊதியத்தை பெறுவதற்காக போராட்டம் மேற்கொள்ளும் சூழல் உள்ளது.
கரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்த தலித் இளைஞா்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடும் நிலை உள்ளது என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் ஏஎம்ஐசி தலைவா் நேதா டிசூஸா, முன்னாள் அமைச்சா் டாக்டா் நரேந்திர நாத், மாவட்ட காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் தினேஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.