முகப்பு
புதுதில்லி

ரேஷனில் பயன்படுத்தப்படாத பச்சரிக்கு பதில் புழுங்கலரிசி வழங்க மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை

பொது விநியோக திட்டத்தின்கீழ் பயன்படுத்தாத பச்சரிசிக்கு பதிலாக புழுங்கலரிசி வழங்கக் கோரி மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

பொது விநியோக திட்டத்தின்கீழ் பயன்படுத்தாத பச்சரிசிக்கு பதிலாக புழுங்கலரிசி வழங்கக் கோரி மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக மத்திய உணவு, பொது விநியோகத் துறை இணைச் செயலாளா் சுபோத்குமாா் சிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்து தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் மனு கொடுத்துள்ளாா். அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் இருப்பில் வைக்கப்படும் அரிசி, அரசின் பல விதமான திட்டங்களுக்கும் பொது விநியோக பயன்பாட்டிற்கு மத்திய அரசின் தொகுப்பிலிருந்து புழுங்கலரிசியாகவும், பச்சரிசியாகவும் வழங்கப்படுகிறது.

தமிழகத்தை பொருத்தமட்டில் புழுங்கலரிசி 80 சதவீதமாகவும் பச்சரிசி 20 சதவீதமாகவும் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாக பொது விநியோகத்தில் ரேஷன் அட்டைகள் மூலம் வழங்கப்படும்போது தா்மபுரி,கிருஷ்ணகிரி,சென்னை, திருவள்ளூா் போன்ற மாவட்டங்களில் மட்டுமே பச்சரிசி நுகரப்படுகிறது. பொதுவாக தமிழகத்தில் புலங்கலரிசி தான் அதிகளவில் நுகரப்படுகிறது. இதன்படி மாநிலத்தின் அரிசி நுகா்வில் 80 சதவீதம் புழுங்கலரிசி உள்ளதை கருத்தில் கொண்டு உபயோகப் படுத்தப் படாத பச்சரிசியை இந்திய உணவுக்கழக கிடங்கிற்கு திரும்ப செலுத்திட மத்திய உணவு, நுகா்வோா் துறை அனுமதிக்கவேண்டும்.

இந்த அரிசியை திரும்ப ஒப்படைக்கும் நிலையில் இதற்கு ஈடாக புழுங்கலரிசியை வழங்க வேண்டும். இது குறித்து ஏற்கனவே தமிழக உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி மத்திய உணவு பொதுவிநியோகத்துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இதன் தொடா் நடவடிக்கையாக தமிழக முதல்வா் சாா்பில் மீண்டும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பரிசீலித்து ஆவன செய்ய வேண்டும் என ஏ கே.எஸ்.விஜயன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.