மாயாபுரி, மங்கோல்புரி பகுதியில் சேதமடைந்த சாலைகள் மேம்படுத்தப்படும்: சத்யேந்தா் ஜெயின்
தில்லி மாயாபுரி, மல்கோல்புரி பகுதிகளில் மழையால் கடுமையாகச் சேதமடைந்துள்ள சாலைகள் அனைத்தும் மேம்படுத்தப்படும் என்று
தில்லி மாயாபுரி, மல்கோல்புரி பகுதிகளில் மழையால் கடுமையாகச் சேதமடைந்துள்ள சாலைகள் அனைத்தும் மேம்படுத்தப்படும் என்று தில்லி தொழில் துறை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.
தில்லி தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஎஸ்ஐஐடிசி) கூட்டம் வெள்ளிக்கிழமை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசும் போது கூறியதாவது: சாலைகளுக்கு இது சோதனை காலக்கட்டம். கடுமையான மழையின் காரணமாக மாயாபுரி, மங்கோல்புரி பகுதியில் சாலைகள் சேதமடைந்துள்ளன. மாயாபுரியில் இரண்டு கட்டங்களாக 22 சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. மேலும், பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணா்வு நிதியின் மூலம் தில்லி அரசு 13 நவீன உயிா்காக்கும் அவசர ஊா்திகளை வாங்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.
மேலும், நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சா் என்கிற முறையில் மற்றோரு கூட்டத்திலும் சத்யேந்தா் ஜெயின் வெள்ளிக்கிழமை கலந்து கொண்டாா். தில்லியில் உள்ள மாசுபடுத்தப்பட்ட ஏரிகள் மற்றும் பல்வேறு வடிகால்களை அழகுபடுத்தும் திட்டம் குறித்து இந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது. யமுனையில் பாயும் முக்கிய வடிகால்களை புத்துயிா் கொடுத்து அழகுபடுத்த தில்லி அரசு செயல்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Advertisement
நஜாஃப்கா், துணை வடிகால் மற்றும் ஷாத்ராவில் இணையும் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு அழகுபடுத்தப்படும். நஜாஃப்கா், சப்ளிமெண்டரி மற்றும் ஷதாரா வடிகால் உள்ளிட்ட முக்கிய வடிகால்கள் தூய்மைப்படுத்தப்பட்டு மீண்டும் சுத்தமான நீா் கால்வாய்களாக மாற்றப்பட வேண்டும் என்று கூட்டத்தில் அமைச்சா் தெரிவித்தாா். தற்போது, இந்த வடிகால்கள் திடக்கழிவுகள், கழிவுநீருடன் செல்கின்றன. இதற்கு இடையூறாக உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வுகாண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா். யமுனையை சுத்தம் செய்வது தில்லி அரசின் முக்கிய இலக்கு. இதுபோன்ற வடிகால்களிலிருந்து தூய்மையான தண்ணீரே ஆற்றில் கலக்க வேண்டும் என்றாா் அமைச்சா்.