முகப்பு
தமிழ்நாடு

தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு!

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளதைப் பற்றி...

Updated On : 4 ஏப்ரல் 2026, 7:04 pm IST
தொல். திருமாவளவன். - (கோப்புப்படம்)
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 8 தொகுதிகளில் விசிக போட்டியிடுகின்றது. இதற்கான வேட்பாளர் பட்டியலை விசிக தலைவர் திருமாவளவன் சில நாள்களுக்கு முன் வெளியிட்டார்.

அந்தப் பட்டியலில் காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் தொல். திருமாவளவன் போட்டியிடுவதாகக் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

Advertisement

Advertisement

திருமாவளவன் ஏற்கனவே 2024 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.யாக உள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிடுவது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது.

இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே உள்ளன. நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறேன். இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கின்றன.

இருந்தாலும், நான் சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினேன். நான் சட்டப்பேரவையில் விளிம்பு நிலை மக்களின் அரசியலைப் பேச வேண்டும் என்று, இன்றைக்கு அல்ல, கடந்த 25 ஆண்டுகளாக எண்ணி இங்கு வந்திருக்கிறேன்.

2001 ஆம் ஆண்டில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இரண்டரை ஆண்டுகள் பதவியில் இருந்து ராஜிநாமா செய்தேன்.

பதவி மீது எனக்கு ஆசையில்லை. காட்டுமன்னார்கோயில் (தனி) தொகுதியில் நான் போட்டியிடவில்லை. நான் திமுக கூட்டணியில்தான் இருக்கிறேன். மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும் என விரும்பினேன்.

ஏற்கெனவே திமுக கூட்டணியில் மங்களூர் எம்எல்ஏவாக வென்றவன். 2006 ஆம் ஆண்டில் தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகைக்காக தொகுதியை விட்டுக் கொடுத்தேன்.

ஒருவருக்கு சீட் கொடுத்தால், ஒன்பது பேர் எனக்கு எதிரியாக மாறுகின்றனர். தேர்தலில் போட்டியிட ஏன் வாய்ப்பு தரவில்லை? என்று ஷா நவாஸுக்கு விளக்கியிருக்கிறேன். என் முடிவை பாலாஜியும், நவாஸும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

2006 ஆம் ஆண்டில் 9 தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டபோதும், தனிச்சின்னத்தில் போட்டியிட்டு அதில், 2 இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றோம். அதன் பின்னர், இன்று வரை எங்களுடைய தனிச்சின்னத்தில்தான் போட்டியிட்டு வருகிறோம்.

தொங்கு சட்டப்பேரவை அமையும். அதனால், ஆசைப்பட்டு கூட்டணி ஆட்சி என்று திருமாவளவன் வதந்தியைப் பரப்பினார் என்றும், திருமாவளவன் துணை முதல்வர் பலர் தங்களது கருத்துகளைப் பரப்பினர். என்னை யாரும் இயக்க முடியாது. பதவிக்கான நான் யார் பின்னாடியும் செல்லவில்லை. யுத்தத்தில் பின் வாங்குவதும் ராஜ தந்திரம்தான்” என்றார்.

summary

Viduthalai Chiruthaigal Katchi leader Thirumavalavan has stated that he is not contesting the Assembly elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.