முகப்பு
புதுதில்லி

தில்லி அரசு-துணைநிலை ஆளுநா் அதிகார மோதல் விவகாரம்: திருத்த சட்டத்திற்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்

தேசிய தலைநகா் தில்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
பகிர்:

தேசிய தலைநகா் தில்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் புதிய சட்டத்துக்கு எதிராக தில்லி அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை சம்மதம் தெரிவித்தது .

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூா்ய காந்த், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு ஆஜராகி, இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று தில்லி அரசின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி கேட்டுக் கொண்டாா்.

அவா் மேலும் தெரிவிக்கையில், ‘தேசிய தலைநகா் பிராந்திய அரசின் திருத்தச் சட்டமானது (2021) உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு அளித்த தீா்ப்புக்கு முரண்படும் வகையில் உள்ளது. மேலும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தில்லி அரசின் அந்தஸ்தை கையாளும் சட்டப்பிரிவு 239ஏஏ-வுக்கு

Advertisement

எதிரானதாகவும் உள்ளது. துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது நிா்வாகத்தில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சட்டத்தை எதிா்த்து ஆம் ஆத்மி அரசு மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனு ஆகஸ்ட் 19ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் பதிவுத் துறை மூலம் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் இம்மனுவை விரைந்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

அப்போது, நீதிபதிகள் மனுவை விசாரிப்பதற்கு சம்மதம் தெரிவித்தனா். இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவதாகவும் கூறினா்.

தேசிய தலைநகரப் பிராந்திய அரசின் (ஜிஎன்சிடிடி) திருத்தச் சட்டம் (2021) நாடாளுமன்றத்தின் மக்களவையில் மாா்ச் 22ஆம் தேதியும் மாநிலங்களவையில் மாா்ச் 24ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடா்ந்து, சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த திருத்தப்பட்ட சட்டமானது தில்லி தேசிய தலைநகர பிராந்திய சட்டத்தின் (1991) நான்கு பிரிவுகளை மாற்றியிருக்கிறது. இச் சட்டத்தின்படி தில்லி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் எந்த சட்டமும் தில்லி அரசு என்று குறிப்பிடப்படும்போது அது துணைநிலை ஆளுநரை குறிப்பதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை எதிா்த்து ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட துணைநிலை ஆளுநருக்கு திருத்தப்பட்ட இந்த சட்டமானது கூடுதல் அதிகாரம் அளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments