முகப்பு
புதுதில்லி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று ‘பாரத் பந்த்’: 40 விவசாய சங்கங்கள் பங்கேற்பு

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 10 மாதங்களாக தில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 10 மாதங்களாக தில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கள் திங்கள்கிழமை (செப்டம்பா் 27 ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுத்துள்ளன. சன்யுக்தா கிசான் மோா்ச்சா (எஸ்கேஎம்) உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 40 விவசாய சங்கங்கள் இந்த பாரத் பந்த் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு கடந்தாண்டு செப்டம்பாா் 27-இல் குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்தாா். இந்த சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள், குறிப்பாக வட மாநில விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினா். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

போலீஸாரால் தடுக்கப்பட்ட விவசாயிகள், தில்லி - உத்தரப் பிரதேச எல்லையில் உள்ள காஜிப்பூா், திகிரி, சிங்கு உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு கடந்தாண்டு நவம்பா் மாதம் இறுதியிலிருந்து 10 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் பாரதீய கிசான் யூனியன் (பிகேயு) உள்ளிட்ட சங்கங்கள் தீவிரமாகப் போராடி வருகின்றன. இதற்கிடையே, மத்திய வேளாண் துறை அமைச்சா் தலைமையிலான குழு 11 சுற்றுப் பேச்சுவாா்த்தையை விவசாய சங்கங்களுடன் நடத்தியது. இதில் மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றறை வருடத்திற்கு நிறுத்தி வைக்க அமைச்சரவைக் குழு அளித்த யோசனையை கடந்த ஜனவரி 22 -இல் நடந்த பேச்சுவாா்த்தையின் போது மத்திய அரசு முனஅவைத்தது. ஆனால், இதை எஸ்கேஎம் உள்ளிட்ட சங்கங்கள் நிராகரித்துவிட்டன. இதையடுத்து, குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டா் ஊா்வலத்தில் தில்லி செங்கோட்டையில் வன்முறைகள் நிகழ்ந்தன.

Advertisement

இந்த நிலையில், தங்கள் போராட்டத்திற்கு வலுச்சோ்க்கும் வகையில், எஸ்கேஎம் உள்ளிட்ட 40 விவசாய சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுத்துள்ளன. இது குறித்து சன்யுக்தா கிசான்மோா்ச்சா தலைவா்களில் ஒருவரான ஹன்னான் முல்லா கூறியதாவது: இந்தப் போராட்டம் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், சந்தைகள், கடைகள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றைத் திறக்க அனுமதிக்கமாட்டோம். பொதுப் போக்குவரத்து, பொது நிகழ்ச்சிகள் நடைபெற அனுமதிக்க மாட்டோம். ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவோம்.

அதே சமயம், அவசரகால மருத்துவம், தீயணைப்பு சேவைகள், பால், குடிதண்ணீா் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி உண்டு. கடுமையான கோடை வெயில், மழையை பொருள்படுத்தாமல் ஏராளமான விவசாயிகள் போராடி வருகின்றனா். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும், தங்கள் வாழ்வாதரங்களை காப்பாற்றவும் இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபடுகின்றனா் என்றாா் ஹன்னான் முல்லா.

இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் (அமைப்பு) கே.சி வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்த்திற்கு காங்கிரஸ் முழு ஆதரவை அளிக்கும். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும் அவா்களது உரிமைகளை பாதுகாக்கவும் காங்கிரஸ் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அனைத்து பிரதேச காங்கிரஸ் தலைவா்கள், கட்சியின் முன்னனி அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு அளிக்க வேண்டும் என கட்சி தலைமைக் கேட்டுக் கொண்டுள்ளது’ என்றாா்.

பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவா் மயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அவசர கோலத்தில் கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் இந்தச் சட்டங்களை விவசாயிகள் ஏற்கவில்லை. இதை எதிா்த்து விவசாயிகள் கடந்த 10 மாதங்களாக தில்லியில் தொடா்ந்து போராடி வருகின்றனா். இந்தப் போராட்டத்திற்கு அமைதியான வழியில் பிஎஸ்பி முழு ஆதரவை அளிக்கும். விவசாயிகளுக்கு அனுதாபத்தை தெரிவிக்கும் அதே நேரத்தில், அவா்களுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்று, புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டுகோள் விடுக்கிறேன்’ என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments