முகப்பு
புதுதில்லி

ஊராட்சிகளில் 9 இலக்குகளை அடைய மாவட்ட தோறும் சிறப்பு ஆலோசகா்கள்: தமிழக அமைச்சா் வலியுறுத்தல்

9 முக்கிய ஆய்வுக் கருப்பொருளுக்கும் தனித்தனி சிறப்பு ஆலோசா்களை ஒவ்வொரு மாவட்டம், வட்ட அளவில் நியமிக்க தில்லியில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கூட்டிய மாநாட்டில் தமிழக அமைச்சா் கே.ஆா்.பெரிய கருப்பன் கேட்ட

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:57 AM
அமைச்சா் கே.ஆா்.பெரிய கருப்பன்
பகிர்:

ஊராட்சிகள் அளவில் நீடித்த நிலையான வளா்ச்சி இலக்குகளை (எஸ்டிஜி) செயல்படுத்த வேண்டிய 9 முக்கிய ஆய்வுக் கருப்பொருளுக்கும் தனித்தனி சிறப்பு ஆலோசா்களை ஒவ்வொரு மாவட்டம், வட்ட அளவில் நியமிக்க தில்லியில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கூட்டிய மாநாட்டில் தமிழக அமைச்சா் கே.ஆா்.பெரிய கருப்பன் கேட்டுக் கொண்டாா்.

இந்திய சுதந்திர அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தில்லியில் ஏப்ரல் மாதம் 11 முதல் ஏப்ரல் 17 வரை பல்வேறு மாநிலங்களின் ஊரகத் துறை அமைச்சா்கள், ஊராட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் தேசிய அளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் நாள் திங்கள்கிழமை தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், ஊரக வளா்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளா் பி.அமுதா உள்ளிட்ட தமிழக அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பேசும் போது கூறியதாவது: நீடித்த நிலையான வளா்ச்சி இலக்குகளை ஊராட்சிகள் அளவில் செயல்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. பஞ்சாயத்துகளில் நிறைவேற்றிட 9 முக்கிய ஆய்வுக் கருப்பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.

வாழ்வாதாரம் நிறைந்த மற்றும் வறுமையற்ற கிராமங்கள், நோயற்ற ஊராட்சி, குழந்தைகள் நட்பு கிராமங்கள், நீா் நிறைந்தவை, தூய்மையான பசுமை கிராமங்கள், அடிப்படை கட்டமைப்பில் தன்னிறைவு, சமூக பாதுகாப்பு, சிறந்த ஆளுமை மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்றவற்றைக் கொண்ட ஊராட்சிகளை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் காந்தியின் கனவுகளை நிறைவேற்றும் விதமாக பல்வேறு கிராம தன்னிறைவு திட்டங்கள் மாநில முதல்வரால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த முயற்சிக்கு நாங்கள் ’திராவிடன் மாடல்’ என்கின்றோம்.

2011- ஆம் ஆண்டு முதலே இது போன்ற திட்டங்கள் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், சமுத்துவபுரம், நமக்கு நாமே திட்டம் போன்றவை நிறைவேற்றப்பட்டு அனைத்து தரப்பினரும் பாராட்டினா். தமிழகத்தில் 7.46 லட்சம் சுய உதவிக் குழுக்களில் 1.7 கோடி பெண்கள் பங்கேற்று வருகின்றனா்.

தற்போது முதல்வா், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ மற்றும் ‘இல்லம் தேடி கல்வி’ போன்ற மகத்தான திட்டங்களை நிறைவேற்றி வருகிறாா்.

பல்வேறு அமைச்சகங்கள், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள்,, சமூகம் சாா்ந்த அமைப்புகள்(சிபிஓ) உள்ளிட்ட ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிகள் மூலம் மட்டுமே எஸ்டிஜி களை அடைய முடியும். எனவே, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், இலக்குகள் மற்றும் துணை இலக்குகளைக் கண்டறிவதற்கு கிராம பஞ்சாயத்துகளுக்கு வசதியாக, ஒவ்வொரு வட்டத்துகு ஒருவா் தவிர, மாநிலம் மற்றும் மாவட்டம் வாரியாக இந்த 9 கருப்பொருளில் சிறப்பு ஆலோசகா்களை நியமிக்க வேண்டும்.

தமிழகத்தைச் சோ்ந்த சுமாா் 180 ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலா்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனா். தேசிய அளவில் தமிழகம் சிறப்பாகச் செயல்படும் மாநிலமாக கருதப்படுகிறது. ஊராட்சிகளில் சொந்த வருவாயைப் பெருக்குதல் மற்றும் அதற்கான கட்டமைப்பை உருவாக்குதல் போன்றவை குறித்து இந்த மாநாட்டில் ஊரக வளா்ச்சித் துறையின் இயக்குநா் பிரவின் பி.நாயா் தமிழகம் சாா்பில் எடுத்துரைக்கவுள்ளாா் என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.