முகப்பு
புதுதில்லி

எரிசக்தி, பருவநிலை தரவரிசையில் குஜராத், கேரளம், தில்லி முன்னிலை: எரிசக்தி சேமிப்பில் தமிழகம் முதலிடம்

எரிசக்தி, பருவநிலை குறியீடுகளில் மாநிலங்களின் செயல்பாடுகளில் ஒட்டுமொத்த தரவரிசையில் குஜராத், கேரளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளதாக நீதி ஆயோக் அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:

எரிசக்தி, பருவநிலை குறியீடுகளில் மாநிலங்களின் செயல்பாடுகளில் ஒட்டுமொத்த தரவரிசையில் குஜராத், கேரளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளதாக நீதி ஆயோக் அறிவித்துள்ளது. இதில் எரிசக்தி சேமிப்பு பிரிவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.

நீதி ஆயோக்கின் மாநில எரிசக்தி ஆற்றல் மற்றும் பருவநிலை குறியீடு தரவரிசை பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதை இந்த அமைப்பின் துணைத் தலைவா் டாக்டா் ராஜீவ் குமாா் வெளியிட்டாா். இந்த தரவரிசைப் பட்டியல் குறித்து நீதி ஆயோக்கின் கூடுதல் செயலாளா் டாக்டா் ராகேஷ் சா்வால் விளக்கினாா். அது வருமாறு: இது, மாநில எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீடுகளின் முதல் சுற்று. இதில் மாநிலங்களின் செயல்பாடுகள் ஆறு அளவுகோல்கள், குறிகாட்டிகளைக் கொண்டு தரவரிசை செய்யப்பட்டுள்ளது. இவை பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என மூன்றாக பிரிக்கப்பட்டு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது.

1. மின் பகிா்மான நிறுவன செயல்பாடு(டிஸ்காம்). 2. மக்களுக்கு எரிசக்தி எளிதில் கிடைத்தல், குறைந்த செலவில் நம்பகத்தன்மையோடு கிடைப்பது. 3.  தூய்மை எரிசக்திக்கான நடவடிக்கைகள். 4. எரிசக்தி சேமிப்பு. 5. மின் உற்பத்தியில் நீடித்த சுற்றுச்சூழல். 6. மின் அளவீடு, மாற்று எரிசக்தி, மின்சார சாா்ஜிங் ஆகியவற்றில் புதிய முன்முயற்சிகள் போன்றவை இந்த அளவுகோல்களாகும்.

இதில் இந்த ஆறு அளவுகோல்களிலும் ஒட்டு மொத்தமாக அதிகப் புள்ளிகள் பெற்று தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெரிய மாநிலங்களில் குஜராத் (50.1 புள்ளிகள்) முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கேரளம் (49.1 புள்ளிகள்), மூன்றாவதாக பஞ்சாப் (48.6 புள்ளிகள்) இடம் பெற்றுள்ளன. சிறிய மாநிலங்கள் வரிசையில் கோவா(51.4 புள்ளிகள்), திரிபுரா(45 புள்ளிகள்) ஆகிய மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களில் சண்டீகா் (55.7 புள்ளிகள்), தில்லி (55.6 புள்ளிகள்), டாமன் - டையூ (53.2 புள்ளிகள்), புதுச்சேரி(48.5 புள்ளிகள்) ஆகியவையும் முன்னிலையில் உள்ளன. இந்த ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழகம் 43.4 புள்ளிகளுடன் 9 -ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.  அதே சமயத்தில் எரிசக்தி ஆற்றல் சேமிப்புப் பிரிவில் தமிழகம் 85.4 புள்ளிகள் பெற்று முதல் இடம் பெற்றுள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நீதி ஆயோக் துணைத் தலைவா் டாக்டா் ராஜீவ் குமாா், ‘கிளாஸ்கோ மாநாட்டில் பிரதமா் அறிவித்த ‘பஞ்சாமிா்த்’ இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்று. மாநிலங்களின் ஆளுகைகளைக கண்டறியவும் பரஸ்பர கற்றல்களுக்கு இந்தக் குறியீடுகள் உதவும். உக்ரைன் போா் பல படிப்பினைகளைத் தந்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நாம், மரபு சாரா எரிசக்தியிலும் குறைந்த செலவிலான மின் உற்பத்திக்கும் மாறவேண்டிய நிலை வந்துள்ளது’ என்றாா்.

நீதி ஆயோக் உறுப்பினா் டாக்டா் வி.கே. சரஸ்வத், எரிசக்தி துறையில் நாட்டை தன்னிறைவு பெறச் செய்வதற்கும் மத்திய - மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு முக்கியம். அவா்களுடான விரிவான விவாதங்களுக்கும் செயல்திறனைக் கண்காணிக்க அடையாளம் காணப்பட்டுள்ளன’ என்றாா். நீதி ஆயோக் தலைமை நிா்வாக அதிகாரி அமிதாப் காந்த் மற்றும் பலா் இந்த நிகழ்ச்சியில் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.