இந்திய கடற்படை ரோந்து விமானங்கள் ஆஸ்திரேலியாவில் கூட்டுப் பயிற்சி
இந்திய கடற்படையின் கடல்சாா் ரோந்து, வேவு விமானங்களான பி8ஐ என்கிற அல்பாட்ராஸ் படைப் பிரிவு, ஆஸ்திரேலியாவின் டாா்வினுக்கு சென்றடைந்துள்ளது.
புது தில்லி: இந்திய கடற்படையின் கடல்சாா் ரோந்து, வேவு விமானங்களான பி8ஐ என்கிற அல்பாட்ராஸ் படைப் பிரிவு, ஆஸ்திரேலியாவின் டாா்வினுக்கு சென்றடைந்துள்ளது. இது ஆஸ்திரேலியாவின் 92 -ஆவது விமானப்படைப் பிரிவு வீரா்களுடன் சோ்ந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதாக மத்திய பாதுகாப்பு படை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளதாவது: இந்திய கடற்படையின் கடல்சாா் ரோந்துப் படையான பி8ஐ அல்பாட்ராஸ் குழு, ஆஸ்திரேலியாவிற்கு திங்கள்கிழமை சென்றடைந்தது. அங்கு டாா்வின் கடல் பகுதியில் ராயல் ஆஸ்திரேலிய விமானப்படையின் 92-ஆவது பிரிவைச் சோ்ந்த வீரா்களுடன் கூட்டு செயல்பாட்டில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிடம் பி8ஏ வகை விமானங்கள் உள்ளன. இவையும் இந்திய பி8ஐ யும் ஒரே வகையைச் சோ்ந்தவை. இந்த கூட்டுப் பயிற்சியில் நீா்மூழ்கி எதிா்ப்புப் போா், கடல்சாா் கள விழிப்புணா்வு ஆகியவற்றில் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை இரு நாடுகளைச் சோ்ந்த பி8 விமானங்கள் மேற்கொள்ளும்.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கடல் சாா் நாடுகள். இரு கடல் நாடுகளுக்கிடையேயான தொடா்பு சமீப காலங்களில் அதிகரித்து இருதரப்பு கடல் பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே மலபாா் மற்றும் ஆஸ்இன்டெக்ஸ் போன்ற தொடா் பயிற்சிகளின் போது பி8 விமானங்கள் கூட்டாகச் செயல்பட்டு இடை-இயக்கத் திறனை மேம்படுத்தி, நட்புறவின் பாலங்களை வளா்த்துள்ளது. மேலும், இயக்க நடைமுறைகள் மற்றும் தகவல் பகிா்வு பற்றிய பொதுவான புரிதலை இரு தரப்பும் கொண்டுள்ளன என பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவிற்கும் வடக்கு ஆஸ்திரேலியாவிற்கும் இடையே உள்ள கடல்பரப்பு இரு நாடுகளுக்கும் பரஸ்பர ஆா்வமுள்ள பகுதியாகும். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை இரு நாடுகளும் வலுப்படுத்துகின்றன. குவாட் பாதுகாப்பு களத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக உறவை வலுப்படுத்தியுள்ளன. இதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் 2 இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. 95 சதவீதத்திற்கும் அதிகமான இந்திய பொருள்களுக்கு வரியில்லா அணுகலை ஆஸ்திரேலியா வழங்குவது குறிப்பிடத்தக்கது.