கரோனா சூழல்: பீதியடையத் தேவையில்லை
தில்லியில் கரோனா சூழலை அரசு மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இதனால், தற்போதைய சூழலில் பீதியடையத் தேவையில்லை என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
புதுதில்லி: தில்லியில் கரோனா சூழலை அரசு மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இதனால், தற்போதைய சூழலில் பீதியடையத் தேவையில்லை என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தில்லியில் கரோனா சூழலை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஏதேனும் தேவை ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தற்போதை நிலையில் பீதி அடைவதற்கான எந்தப் பெரிய காரணமும் இல்லை. சூழலுக்கு ஏற்றபடி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றாா்.
தில்லியில் திங்கள்கிழமை நோ்மறை விகிதம் 2.70 சதவீதமாக இருந்தது. இது கடந்த 2 மாதங்களில் இல்லாத அதிக பதிவாகும். இது தலைநகரில் மீண்டும் கரோனா அதிகரித்து வருவது குறித்த கவலையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி தில்லியில் நோய்த் தொற்று பரிசோதனை நோ்மறை விகிதம் 2.87 சதவீதம் என்ற அளவில் பதிவாகி இருந்தது.
தில்லியில் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி நோய்த் தொற்று விகிதம் 0.5 சதவீதமாக இருந்த நிலையில் திங்கள்கிழமை இது 2.70 சதவீதமாக அதிகரித்திருந்தது குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. புதிய வைரஸ் கண்டறியப்படாத வரை அது பற்றிய கவலை கொள்ள தேவையில்லை. தில்லியில் தினசரி பாதிப்புகள் 100-இலிருந்து 200 என்ற அளவில் உள்ளது. மருத்துவமனைகளில் சோ்க்கப்படும் நோயாளிகள் குறித்த கண்காணிப்பை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அந்தப் பதிவு தற்போது குறைந்து வருகிறது. தற்போதைக்கு நோய்த்தொற்று நோ்மறை விகிதத்தின் மீது கவனம் கொள்ளத் தேவையில்லை’ என்றாா்.