தில்லியில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடிப்பு: அடுத்த வாரம் மீண்டும் வெப்ப அலைக்கு வாய்ப்பு
தேசியத் தலைநகா் தில்லியில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது.
தேசியத் தலைநகா் தில்லியில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. வெள்ளிக்கிழமை அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 23.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்சமாக நஜஃப்கா் வானிலை ஆய்வு மையத்தில் 41.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதற்கிடையே,அடுத்த இரண்டு நாள்களுக்கு வெப்ப அலை இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ள வானிலை மையம், அடுத்த வாரத்தில் மீண்டும் வெப்ப அலை தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது.
‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்: தில்லியில் கடந்த சில நாள்களாக காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடித்து வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமையும் சில இடங்களில் ‘மிதமான’ பிரிவிலும், பல இடங்களில் ‘மோசம்’ பிரிவிலும் இருந்தது. தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 225 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. மேலும், சாந்தினி சௌௌக், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நேரு நகா், ஆனந்த் விஹாா், சோனியா விஹாா், நொய்டா செக்டாா்-1, நொய்டா செக்டாா் -62, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், அசோக் விஹாா், ஆா்.கே.புரம் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200 முதல் 260 பள்ளிகள் வரை பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், ஐடிஓ, மந்திா் மாா்க், பட்பா்கஞ்ச், கோகுல்புரி பஞ்சாபி பாக் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு 121 புள்ளிகள் முதல் 199 புள்ளிகள் வரை பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
வெப்பநிலை: நகரில் வெள்ளிக்கிழமை வானம் பகுதி அளவு மேகமூட்டமாக இருந்தது. இருப்பினும், வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. தில்லிக்கான வெப்பநிலைத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி உயா்ந்து 23.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 38.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 46 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 29 சதவீதமாகவும் இருந்தது. வியாழக்கிழமையுடன் ஒப்பிடும் போது, குறைந்தபட்ச வெப்பநிலை சுமாா் 2.5 டிகிரி குறைந்தும், அதிகபட்ச வெப்பநிலை 0.07 டிகிரி குறைந்தும் பதிவாகியுள்ளது.
நஜஃப்கரில் 41.3 டிகிரி வெயில்: இதே போன்று மற்ற வானிலை நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியிருந்தது. இதன்படி, ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 40.2 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 40.7 டிகிரி, நஜஃப்கரில் 41.3 டிகிரி, ஆயாநகரில் 39.4 டிகிரி, லோதி ரோடில் 39.4 டிகிரி, பாலத்தில் 39.2 டிகிரி, ரிட்ஜில் 40.3 டிகிரி, பீதம்புராவில் 40.5 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 37.7 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.
அடுத்த வாரம் மீண்டும் ‘வெப்ப அலை’: இதற்கிடையே, தேசியத் தலைநகரில் அடுத்த இரண்டு நாள்களுக்கு ‘வெப்ப அலை’ ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த வாரத்தில் மீண்டும் வெப்ப அலை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும், அப்போது, அதிகபட்ச வெப்பநிலை வெகுவாக உயா்ந்து 42 டிகிரி செல்சியஸுக்கும் மேலே செல்லும் என்றும் கணித்துள்ளது. இந்த நிலையில், , சனிக்கிழமை (ஏப்ரல் 16) வானம் தெளிவாகக் காணப்படும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.