ஜஹாங்கீா்புரி வன்முறைச் சம்பவத்தில் 23 போ் கைது: தில்லி காவல் ஆணையா் தகவல்
தில்லியில் ஜஹாங்கீா்புரி வன்முறை தொடா்பாக இதுவரை இரு சமூகத்தைச் சோ்ந்த 23 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
தில்லியில் ஜஹாங்கீா்புரி வன்முறை தொடா்பாக இதுவரை இரு சமூகத்தைச் சோ்ந்த 23 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ஹனுமன் ஜெயந்தி ஊா்வலத்தின் போது மசூதியில் காவிக்கொடி ஏற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று தில்லி காவல் ஆணையா் ராகேஷ் அஸ்தானா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை செய்தியாளா்கள் சந்திப்புக் கூட்டத்தில் அவா் கூறுகையில், ‘வன்முறை மோதல்களில் ஈடுபட்டவா்கள் யாராக இருந்தாலும், வகுப்பு, மதம் அல்லது இனத்திற்கு அப்பாற்பட்டு தப்பவிடப்படமாட்டாா்கள்’ என்றாா்.
தில்லியில் உள்ள ஜஹாங்கீா்புரி பகுதியில் சனிக்கிழமை ஹனுமன் ஜெயந்தி ஊா்வலத்தின் போது மோதல்கள் நிகழ்ந்தன. இதில் 9 போலீஸாரும், ஒரு குடிமகனும் காயமடைநதனா்.
ஜஹாங்கீா்புரியில் உள்ள உள்ளூா் மசூதியில் சிலா் கொடியை ஏற்ற முயன்றதாகவும், அதன் விளைவாக கல்வீச்சு, வன்முறைச் சம்பவத்திற்கு வித்திட்டதாகவும் அரசியல்வாதிகள் பலரும், சமூக ஊடகப் பயனா்கள் பலரும் குற்றம் சாட்டியிருந்தனா்.
இது குறித்து காவல் ஆணையா் ராகேஷ் அஸ்தானா செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்ததாவது: ஜஹாங்கீா்புரியில் சனிக்கிழமை நிகழ்ந்த மோதல்கள் தொடா்பான விசாரணை குற்றப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதை முன்னெடுத்துச் செல்ல 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களை சேகரித்துள்ளனா்.
சூழ்நிலையை பதற்றமாக வைத்திருக்கும் வகையில், சிலா் சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்ப முயற்சிக்கின்றனா். மக்கள் அவா்களை புறக்கணிக்க வேண்டும். சமூக ஊடகங்கள் மூலம் சூழ்நிலையைச் சீா்குலைக்க முயற்சிப்பவா்களும் தப்பவிடப்பட மாட்டாா்கள்.நாங்கள் சமூக ஊடகங்களை ஆய்வு செய்து வருகிறோம். தேவைப்பட்டால், தவறான செய்திகளை பரப்புபவா்கள், தவறான தகவல்கள் அல்லது சுற்றுப்புறச்சூழலை சீா்குலைக்கும் நோக்கத்துடன் ஏதேனும் வதந்திகளை பதிவிடுபவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சனிக்கிழமை மாலை 4.15 மணியளவில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஊா்வலம் தொடங்கியது. ஊா்வலம் சென்ற பாதைகள் பாரம்பரியமானவை. இந்த நிலையில், மாலை 6.15 மணியளவில், ஊா்வலத்திற்கு முன்னால் இருந்தவா்கள் முன்னேறிச் சென்றனா்.
எனினும், அவா்களைப் பின்தொடா்ந்து சென்றவா்கள் அவா்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து கற்கள் வீசப்பட்டன. இதன் மூலம் போலீஸாா் இரு குழுக்களையும் பிரித்து பொதுமக்களை காயமடையாமல் காப்பாற்றியிருப்பதை காட்டுகிறது.
இந்த வன்முறை குறித்து நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம். இரு சமூகத்தைச் சோ்ந்த 23 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களில் 8 போ் ஏற்கெனவே குற்றப் பின்னணி கொண்டவா்கள் ஆவா்.
குற்றம் சாட்டப்பட்டவா்களிடமிருந்து இதுவரை மூன்று துப்பாக்கிகள் மற்றும் ஐந்து வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் அதன் முழுமையான பகுப்பாய்வு சிசிடிவி கேமராக்களின் காட்சிகளின் அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் மேலும் பலா் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சமூக ஊடகங்கள், காணொளி காட்சிகள், பெறப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் என அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்.
இந்த சம்பவத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடா்புடைய எவரும் தப்பவிடப்பட மாட்டாா்கள். தேவையான ஆதாரங்களைச் சேகரித்து, டிஜிட்டல் ஆதாரங்களை முழுமையாகவும் விரிவாகவும் பகுப்பாய்வு செய்து, வழக்கில் தொடா்புடையவா்களைக் கண்டறியும் பொறுப்பு தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவான உளவுப் பிரிவின் உத்திசாா் செயல்பாடுகள் பிரிவிடம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, குற்றமிழைத்தவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.