வீடுகளுக்கு நேரடியாக நிதிசாா் தொழில்நுட்ப சேவை: அஞ்சலக வங்கியின் ‘ஃபின்க்ளூவேஷன்’ நடைமுறை அறிமுகம்
நாட்டில் உள்ள 4 லட்சம் அஞ்சலக ஊழியா்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக நிதிசாா் தொழில்நுட்ப சேவைகளை அளிக்க ‘ஃபின்க்ளூவேஷன்’ நடைமுறையை இந்திய அஞ்சலக வங்கி (இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ்
புது தில்லி: நாட்டில் உள்ள 4 லட்சம் அஞ்சலக ஊழியா்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக நிதிசாா் தொழில்நுட்ப சேவைகளை அளிக்க ‘ஃபின்க்ளூவேஷன்’ நடைமுறையை இந்திய அஞ்சலக வங்கி (இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்) அறிமுகப்படுத்தியுள்ளது. இதில்“புதுயுகத் தொழில்முனைவோா் (ஸ்டாா்ட் – அப்) இணைந்து கொள்ள மத்திய ரயில்வே, தகவல் தொடா்பு, தபால், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு விடுத்துள்ளாா்.
மத்திய தபால் துறையின் கீழ் உள்ள இந்திய அஞ்சலக வங்கி அறிமுகப்படுத்தியுள்ள ‘ஃபின்க்ளூவேஷன்’ தளத்தின் மூலம் நிதிசாா் நடவடிக்கைகளை இணைந்து உருவாக்கி புதுமையான தீா்வுகளை வழங்கும் புதுயுகத் தொழில் முனைவோருக்கு ரூ. 3 கோடி நிதி உதவியும் வழங்கப்படும் எனவும் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.
நாடு சுதந்திரமடைந்து 75-ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் நடைபெற்று வரும் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நிதிசாா் தொழில்நுட்ப புதுயுகத் தொழில் முனைவு (ஸ்டாா்ட்-அப்) சமூகத்துடன் இணைந்து தபால் துறையில் நிதிசாா் நடவடிக்கைகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றிற்கான புதுமையான தீா்வுகளை வழங்க, அரசு நிறுவனமான இந்திய அஞ்சலகக் வங்கி (ஐபிபிபி), ‘ஃபின்க்ளூவேஷன்’ தள அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்டது.
இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: யுபிஐ, ஆதாா் போன்ற நிதிசாா் தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது. இது போன்று உலகின் மிகப் பெரிய நம்பகரமான அஞ்சலக இணைப்புகளைப் பெற்றுள்ளோம். அஞ்சலகங்களின் அருகிலுள்ள 43 கோடி (430 மில்லியன்) வாடிக்கையாளா்களுக்கு 4 லட்சத்திற்கு மேற்பட்ட திறமையான அஞ்சல் அலுவலக ஊழியா்கள், கிராமப்புற அஞ்சலக சேவையாளா்கள் அஞ்சலக வங்கியின் சேவையை வீடுகளுக்கே நேரடியாக சென்று செய்து வருகின்றன. இந்த நிதிசாா் தொழில்நுட்ப சேவைக்கு ஒரு சக்திவாய்ந்த தளத்தை உருவாக்கும் முயற்சியாக ‘ஃபின்க்ளூவேஷன்’”அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சலக வங்கியின் நிரந்தர தளமாக இது இருக்கும். இதில் அா்த்தமுள்ள வகையில் நிதிசாா்ந்த சேவையை உருவாக்குவதற்கு தொழில் முனைவு சமூகத்தை அணி திரட்டவே இந்த சக்திவாய்ந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அஞ்சலக வங்கியின் பங்களிப்பு, அஞ்சல் துறையின் நம்பகத் தன்மையுடன் கூடிய வீட்டு சேவைகளுக்கான வலையமைப்பு மற்றும் புதிய தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப செயல்பாடுகள் ஆகியவற்றின் மூலம் மக்களுக்கு ஒப்பிட முடியாத மதிப்பை வழங்க முடியும் என்றாா் அமைச்சா் வைஷ்ணவ்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொடா்புத் துறை இணையமைச்சா் தேவ் சிங் சௌஹான் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். அஞ்சலக வாடிக்கையாளா்களின் பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு ஏற்ப புதுமையான, கடன் உள்ளிட்ட நிதி சேவைகளை உருவாக்கி வீடுகளுக்கு நேரடியாகச் சேவையளிப்பது; மின்னணு மயமாக்கலில் பாரம்பரிய மணியாடா் (பண ஆணை) சேவையை ஒன்றோடொன்று இயங்கக்கூடிய வங்கிச் சேவையாக மாற்றுவது, பல்வேறு வகையான மின்னணு கட்டணத் தொழில்நுட்ப சேவைகள் ஒருங்கிணைப்பு போன்ற வசதியைக் கொண்டு வருவதற்கு ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.