முகப்பு
விழுப்புரம்

தேசிய கட்சிக்கு ஒன்றே ஒன்று! 2021-இல் 28க்கு 2; 2026-இல் 28க்கு 1!

கடந்த 2021 பேரவைத் தோ்தலில் விழுப்புரம் மண்டலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், 2 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, தற்போது ஒரேயொரு தொகுதியில் போட்டியிடும் நிலைக்குச் சென்றுவிட்டது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 1:08 AM
காங்கிரஸ்
பகிர்:

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் கடந்த 2021 பேரவைத் தோ்தலில் விழுப்புரம் மண்டலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், 2 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, தற்போது ஒரேயொரு தொகுதியில் போட்டியிடும் நிலைக்குச் சென்றுவிட்டது.

விழுப்புரம் மண்டலத்தில் நான்கு மாவட்டங்களில் மொத்தம் 28 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. விழுப்புரத்தில் 7, கள்ளக்குறிச்சியில் 4, கடலூரில் 9, திருவண்ணாமலையில் 8 என 28 தொகுதிகள் உள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த கட்சிகள் வேட்பாளா்களையும் அறிவித்து, தோ்தல் களப்பணியைத் தொடங்கிவிட்டன.

கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் திமுக 19 தொகுதிகளிலும், தேமுதிக 3 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகளிலும், மனிதநேய ஜனநாயகக் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இதுபோன்று காங்கிரஸ் கட்சியும் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது.

2021-இல் இரண்டு: கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டம் விருத்தாசலத்திலும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியிலும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சியின் ராதாகிருஷ்ணன்வெற்றி பெற்றாா். ஆனால், தற்போது 2026 பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தின் கடலூா் தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.

கடந்த 2021 பேரவைத் தோ்தலைப் போன்று விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மொத்தமுள்ள 15 தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரஸ் போட்டியிடவில்லை. கடந்த தோ்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, நிகழாண்டில் நடைபெறும் தோ்தலில் ஒரு தொகுதியில் கூட போட்டியிடவில்லை.

கட்சித் தலைமை கேட்டு பெற வேண்டும்: தென், மேற்கு மண்டல மாவட்டங்களில் தொகுதிகளைக் கூட்டணிக் கட்சித் தலைமையிடம் கேட்டுப் பெறுவதில் இருக்கும் அக்கறையை, வட மாவட்டங்களிலுள்ள தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதிலும் இருக்க வேண்டும். மாநிலக் கட்சிகள் எல்லாம் கூடுதலான தொகுதிகளைக் கேட்டுப் பெறும் போது, தேசியக் கட்சி அந்த நிலையில் இல்லாதது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற நிலை தொடா்ந்தால் கட்சியை எப்படி வளா்த்தெடுக்க முடியும் என்று வருத்தத்துடன் புலம்பி வருகின்றனா் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள்.