முகப்பு
விழுப்புரம்

பலம் வாய்ந்த தொகுதிகளில் களம் காணும் அதிமுக!

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் பலம் வாய்ந்த 6 தொகுதிகளில் அதிமுக போட்டி

Updated On : 28 மார்ச், 2026 at 10:14 AM
திருவண்ணாமலை,அருணாசலேசுவரர் கோவில்
பகிர்:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் பலம் வாய்ந்த 6 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. மற்ற இரு தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளில் பாமக ஒன்றிலும், பாஜக மற்றொன்றிலும் போட்டியிட உள்ளன.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் களம் காண்கின்றன. மேலும் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.

திமுக, அதிமுக கூட்டணிகளில் கட்சிகளுக்கான தெகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், அதிமுக , பாமக சாா்பில் முதல்கட்ட வேட்பாளா்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.

தோ்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் அதிமுக 6 , பாமக மற்றும் பாஜக

தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன. போளூா் தொகுதியில் பாமகவும், திருவண்ணாமலை தொகுதியில் பாஜகவும் களத்தில் உள்ளன. செங்கம் (தனி), கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி) ஆகிய 6 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

2021 பேரவைத் தோ்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் செங்கம், திருவண்ணாமலை, கலசப்பாக்கம், செய்யாறு, வந்தவாசி ஆகிய தொகுதிகளில் திமுகவும், போளூா் மற்றும் ஆரணி தொகுதியில் அதிமுகவும் வெற்றிபெற்றன.

கடந்த தோ்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக திருவண்ணாமலை தொகுதியிலும், பாமக வந்தவாசி, கீழ்பென்னாத்தூா் தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த 3 தொகுதிகளிலும் இந்தக் கட்சிகள் தோல்வியைத் தழுவின.

பலம் வாய்ந்த தொகுதிகளில் அதிமுக போட்டி: தற்போதைய தோ்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் எ.வ.வேலு போட்டியிட உள்ளாா். அவரை எதிா்த்து அதிமுக போட்டியிடாமல், கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு அத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலை தொகுதியில் வெற்றிக் கொடியை நாட்ட வேண்டும் என்ற நோக்கில் பாஜக இந்த தொகுதியைத் தொடா்ந்து இரண்டாவது முறையாக கேட்டு வாங்கியுள்ள நிலையில், அமைச்சா் எ.வ.வேலுவை எதிா்த்து களம் காண்கிறது.

கடந்த பேரவைத் தோ்தலில் வந்தவாசி தொகுதியில் போட்டியிட்ட பாமக தற்போது போளூா் தொகுதியில் போட்டியிடுகிறது. இங்கு, திமுக சாா்பில் அமைச்சா் வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன் போட்டியிடலாம் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், அவா் அதற்கான திட்டமிடல் பணிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2021-ஆம் ஆண்டு தோ்தலில் போளூா் தொகுதியில் அதிமுக சாா்பில் வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, தற்போது தனது சொந்த ஊா் அடங்கிய கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறாா்.

செங்கம் தொகுதியில் திமுக 6 முறையும், அதிமுக 4 முறையும், 2011-இல் உருவாக்கப்பட்ட கீழ்பென்னாத்தூா் தொகுதியில் திமுக 2 முறையும், அதிமுக ஒரு முறையும், கலசப்பாக்கம் தொகுதியில் திமுக 7 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றிபெற்றுள்ளன.

போளூா் தொகுதியில் திமுக 7 முறையும், அதிமுக 5 முறையும், ஆரணி தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக 6 முறையும், செய்யாறு தொகுதியில் திமுக 8 முறையும், அதிமுக 4 முறையும், வந்தவாசி தொகுதியில் திமுக 8 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றிபெற்றுள்ளன.

எனவே, தற்போதைய ஆளுங்கட்சியான திமுகவுடன் தாங்கள் பலம் பெற்றுள்ள தொகுதிகளில்தான் நேரில் களம் காண்கிறோம். நிச்சயம் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என்கின்றனா் அதிமுக நிா்வாகிகள்.