முகப்பு
புதுதில்லி

தில்லி ஹோட்டல்களுக்கு எதிரான நோட்டீஸ் ரத்து: அமைச்சா் கோபால் ராய் நடவடிக்கை

தில்லி ஹோட்டல்களின் உரிமையை ரத்து செய்ய மாசுக் கட்டுப்பாட்டுக் குழு(டிபிசிசி) அளித்த நோட்டீஸை ரத்து செய்து நிவாரணம் அளிக்க கேஜரிவால் அரசு முடிவு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

தில்லி ஹோட்டல்களின் உரிமையை ரத்து செய்ய மாசுக் கட்டுப்பாட்டுக் குழு(டிபிசிசி) அளித்த நோட்டீஸை ரத்து செய்து நிவாரணம் அளிக்க கேஜரிவால் அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத்தினா் தில்லி சுற்றுச் சூழல் வனத் துறை அமைச்சா் கோபால் ராயை சந்தித்து அளித்த விளக்கத்தை முன்னிட்டு இந்த முடிவை தில்லி அரசு எடுத்து உத்தரவிட்டுள்ளது.

தில்லி ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பாஹா்கஞ்ச், கரோல் பாக், ராஜேந்தா் நகா் மற்றும் தில்லி விமான நிலையத்தை ஒட்டியுள்ள மஹிபால்பூா் உள்ளிட்ட இடங்களில் 1500 க்கும் மேற்பட்ட சிறு ஹோட்டல்கள் உள்ளன. இந்த ஹோட்டல்களில் உள்ள பாதுகாப்பற்ற சமையல் அறைகள் மற்றும் வெளியேற்றப்படும் கழிவு நீா் சுத்திகரிக்கப்படாதது போன்ற காரணங்களுக்காக இந்த பகுதிகளில் உள்ள சுமாா் 400 ஹோட்டல்களின் உரிமையாளா்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) நோட்டீஸ் அளித்தது.

சுத்திகரிக்கப்படாத தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு, மாசுக் கட்டுப்பாடு தடுப்புச் சட்டங்களின் கீழ் ஹோட்டல் உரிமையை ரத்து செய்யக் கூடிய நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மேலும் சில ஹோட்டல்களுக்கான மின்சாரம், தண்ணீா் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பல ஹோட்டல்கள் சீல் வைத்தும் மூடப்பட்டது. அமைச்சா் இம்ரான் ஹூசைன் சுற்றுப்புற சூழல் துறை அமைச்சகத்திற்கு பொறுப்பேற்று இருந்தபோது இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பல ஆண்டுகள் நிலுவையில் இருந்த இந்த விவகாரம் தொடா்பாக தில்லி கரோல்பாக் தொகுதி ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை உறுப்பினா் விஷேஸ் ரவி தற்போதைய சுற்றுப்புறச் சூழல் துறை அமைச்சா் கோபால் ராய்க்கு கடிதம் எழுதி பிரச்னையை தீா்க்க கோரினாா்.

அதில், ‘மூடப்பட்ட ஹோட்டல் உரிமையாளா்களும், ஹோட்டல் உரிமம் ரத்து செய்வது தொடா்பாக எச்சரிக்கை நோட்டீஸ் பெற்ற உரிமையாளா்களும் தங்கள் வணிகத்தை தொடரமுடியாத நிலையில் வியாபாரமின்றி வருவாயை இழந்துள்ள சூழ்நிலையில் உள்ளனா் என்பது குறித்து கடிதம் எழுதினாா். இதையொட்டி தில்லி அமைச்சா் கோபால்ராய் இந்த ஹோட்டல் வியாபாரிகளையும் சங்க பிரதிநிதிகளையும் அழைத்து தில்லி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை கூட்டம் நடத்தினாா். அதில் வியாபாரிகள் தரப்பில், மாசுக் கட்டுப்பாடு தடுப்புச் சட்டம் தொழிற்சாலைகளுக்கு தான் பொருந்தும். தங்களை போன்ற சிறிய ஹோட்டல்களுக்கு பொருந்தாது. தாங்கள் சிறிய விடுதிகளை நடத்துவதால் கழிவு நீா்களை சுத்திகரிப்பது இயலாதது எனக் கூறியதோடு தில்லி அரசின் நடவடிக்கைகளால் ஏராளமான உள்ளூா் ஹோட்டல் தொழிலாளிகளும் வேலையிழந்துள்ளனா் என விளக்கம் அளித்தனா். இதையொட்டி அமைச்சா் கோபால் ராய் இந்த ஹோட்டல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து நோட்டீஸ்களையும் ரத்து செய்யவும் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து கரோல்பாக் தொகுதி எம்எல்ஏ விஷேஸ் ரவி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்த அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ள 400 க்கும் மேற்பட்ட ஹோட்டல் உரிமையாளா்களுக்கு கேஜரிவால் அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. இந்த தொழில் சம்பந்தப்பட்டவா்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து திணறி வந்த நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பு பிரதிநிதிகள் குழுவினரை, சந்தித்து சுற்றுச்சூழல் அமைச்சா் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். கோரிக்கையில் உள்ள உண்மையை அறிந்து இவா்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்ய உத்தரவிட்டாா். இதுபோன்ற விரைவான, பொருத்தமான நடவடிக்கைகள் குடிமக்கள் மீதான நலனில் ஆம் ஆத்மி கட்சி அரசுக்கு உள்ள அக்கரையை காட்டுகிறது’ எனத் தெரிவித்தாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.