முகப்பு
புதுதில்லி

அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி அனுப்ப முன்னுரிமை

மின் துறைக்கு குறிப்பாக அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி அனுப்புவதற்கு முன்னுரிமை அளிப்படுகிறது. இதன் மூலம் நிகழ் ஏப்ரல் மாதத்தில் அனல் மின்நிலையங்களுக்கு 10 சதவீதத்திற்கு கூடுதலாக நிலக்கரி கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ம

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:04 AM
பகிர்:

மின் துறைக்கு குறிப்பாக அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி அனுப்புவதற்கு முன்னுரிமை அளிப்படுகிறது. இதன் மூலம் நிகழ் ஏப்ரல் மாதத்தில் அனல் மின்நிலையங்களுக்கு 10 சதவீதத்திற்கு கூடுதலாக நிலக்கரி கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைவதற்கு சரக்கு ரயில்களும், குறிப்பாக ரேக்குகளின்(பெட்டிகள்) பற்றாக்குறையும் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை முன்னிட்டு ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அது வருமாறு: அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை இந்திய ரயில்வே தொய்வின்றி தொடா்ந்து வழங்கி வருகிறது. மின் உற்பத்தி நிலையங்களில் குறிப்பாக நீண்ட தூரத்தில் உள்ள அனல் மின்நிலையங்களுக்கு நிலக்கரியை விரைவாக வழங்குவதை உறுதி செய்ய கூடுதல் ரயில்கள் மற்றும் ரேக்குகள் வழங்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிலக்கரியை எடுத்துச் செல்லும் ரயில் போக்குவரத்தை அதிகப்படுத்தியுள்ளதன் விளைவாக, 2021, செப்டம்பா் முதல் நிகழாண்டு மாா்ச் வரை 32 சதவீதம் வரை கூடுதலாக சரக்கு ரயில்களில் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தற்போது ஏப்ரலிலும் சரக்குப் போக்குவரத்தை திறனுடன் கையாண்டதில் மேலும் 10 சதவீதம் உயா்ந்துள்ளது.

2021-22-ம் ஆண்டில் இந்திய ரயில்வே மூலம் நிலக்கரி 111 மில்லியன் டன்ககளுக்கும் கூடுதலாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. 2020-21-இல் 542 மில்லியன் டன்னாக இருந்த நிலக்கரி அளவு, கடந்த 2021-22-இல் 653 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது 20.4 சதவீத வளா்ச்சியாகும். தற்போது மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நிகழ் ஏப்ரல் மாதம் அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை எடுத்துச் செல்ல முன்னுரிமை அளிக்க ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நிலக்கரி விநியோகம் 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ரயில்வே துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.